கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், தனியாக ஒரு யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். இதில் அவ்வப்போது பிரபலங்களுடன் உரையாடி வீடியோ பதிவிட்டு வருகிறார். இதற்கிடையே தற்போது இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜகவல் ஸ்ரீநாத்துடன் உரையாடி இருந்தார் அஸ்வின். இதில் பல விஷயங்களை இருவரும் பேசியிருந்தனர். பேட்டியின் முடிவில், `உங்களுக்குப் பிடித்த நடிகர்கள் யார்?' என்று ஸ்ரீநாத்திடம் அஸ்வின் கேள்வி எழுப்பினார்.
அதற்கு, ``அமிதாப்பச்சன், ஷாரூக் கான் மற்றும் ரஜினிகாந்த் என மூன்று நடிகர்களையும் பிடிக்கும்'' என்று அவர் சொல்ல உடனே, `ரஜினி ஏன் பிடிக்கும்' என அஸ்வின் மறுகேள்வி எழுப்பினார். அதற்கு, ``நம் வாழ்க்கைக்கு ரஜினி அற்புதமான ஆற்றலைக் கொடுக்கிறார் என்று நான் நினைக்கிறேன். நீங்கள் கடுமையான மன அழுத்தத்தில் இருந்தால் ரஜினியின் திரைப்படத்தைப் பாருங்கள். கண்டிப்பாக முழுமையான உற்சாகத்தோடு மீண்டு வருவீர்கள். ரஜினியின் படங்களில் அடிமட்டத்திலிருந்து வந்து உயரும்படி அமைக்கப்பட்டிருக்கும். இதோடு, அவரது திரை ஆளுமை, அவரிடம் இருக்கும் ஒரு வகையான ஈர்ப்பு, என எல்லாமே சேர்த்துப் பிடிக்க வைக்கிறது. இதனால் அவரை எனக்கு மிகவும் பிடிக்கும்.
ஒன்றிரண்டு முறை அவரை நேரில் சந்தித்திருக்கிறேன். ஒரு முறை பெங்களூரு விமான நிலையத்தில் வைத்து அவரை சந்தித்தேன். அப்போது தனது காரில் என்னை ஏறும்படியும், எங்குச் செல்ல வேண்டுமோ, அங்கு இறக்கிவிடுகிறேன் என்று ரஜினி சொன்னார். அவரது கனிவே கனிவுதான். உங்கள் நாள் மோசமாக இருந்தால், ரஜினிகாந்த்தின் திரைப்படத்தைப் பாருங்கள். உற்சாகமாகி விடுவீர்கள்" என நெகிழ்ந்து பேசியுள்ளார்.