மம்மூட்டியின் பெர்த்டேக்கு என்னை ஏன் கூப்பிடவில்லை? வைரலாகும் 3 வயது சிறுமி

by Nishanth, Sep 9, 2020, 16:23 PM IST

மம்மூட்டி தன்னுடைய பிறந்தநாளுக்கு ஏன் என்னை அழைக்கவில்லை என்று கூறி 3 வயது சிறுமி அழுது புலம்பிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மலையாள மெகா ஸ்டார் மம்மூட்டி தனது 69வது பிறந்த நாளை நேற்று முன்தினம் கொண்டாடினார். கொரோனா காலமாக இருப்பதால் ரசிகர்கள் யாரும் என்னுடைய பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டிருந்தார்.


இந்நிலையில் நேற்று ஒரு 3 வயது சிறுமி அழுது புலம்பும் ஒரு வீடியோவை மம்மூட்டி தனது பேஸ்புக்கில் வெளியிட்டு இருந்தார். அந்த வீடியோவில், மம்மூட்டி தனது பிறந்தநாளுக்கு என்னை மட்டும் ஏன் கூப்பிட வில்லை என்று கூறி அந்த சிறுமி அழுது ரகளை செய்கிறார். அவரது பெற்றோர் எவ்வளவோ சமாதானப் படுத்தியும் அந்த சிறுமி கேட்பதாக இல்லை.


இந்த வீடியோவை தனது பேஸ்புக்கில் பகிர்ந்த மம்மூட்டி, அந்த சிறுமியின் ஊரோ, பெயரோ தனக்கு தெரியவில்லை என்றும், எனவே அந்த சிறுமியை யாராவது கண்டு பிடிக்க உதவ முடியுமா என்று கேட்டிருந்தார். இந்த வீடியோ வெளியான உடனேயே அந்த சிறுமி எங்கே இருக்கிறார் என்பது குறித்த விவரத்தை அவரது ரசிகர்கள் கண்டுபிடித்துவிட்டனர்.


கேரளாவிலுள்ள மலப்புரம் மாவட்டம் பெரிந்தல்மண்ணா பகுதியை சேர்ந்த ஹமீது அலி மற்றும் சஜ்லா ஆகியோரின் மூத்த மகள் தான் பீலி என்ற இந்த 3 வயது சிறுமி. ஹமீது அலி மம்மூட்டி ரசிகர் மன்றத்தில் ஆன்லைன் பிரமோட்டராக உள்ளார். இதனால் சிறுவயதிலேயே பீலியும் மம்மூட்டியின் தீவிர ரசிகை ஆனார். இந்நிலையில் நேற்று முன்தினம் மம்மூட்டி தனது பிறந்தநாளை கொண்டாடுவது தொடர்பான செய்தி டிவியில் வந்ததை பீலி பார்த்துள்ளார்.


பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு தன்னை மம்மூட்டி அழைக்க வில்லையே என்ற கவலை பீலிக்கு ஏற்பட்டது. இதனால் அந்த சிறுமி அழத் தொடங்கினார். ஹமீது அலியும், சஜ்லாவும் எவ்வளவோ சொல்லியும் அந்த சிறுமி கேட்கவில்லை. நீண்டநேரம் ரகளை செய்த பின்னரே அந்த சிறுமி பெற்றோருடன் சமாதானத்திற்கு வந்தார். மம்மூட்டியை உடனடியாக பார்க்கச் செல்லலாம் என்று உறுதியளித்ததால் தான் அவர் அழுகையை நிறுத்த சம்மதித்தார். மகள் அழுவதை ஹமீது அலி வீடியோ எடுத்து அதை தனது நண்பர்களுக்கு பகிர்ந்தார். அந்த வீடியோ தான் தற்போது வைரலாகி மம்மூட்டி வரை சென்றது.


அந்த சிறுமி இருக்கும் இடத்தை தெரிந்து கொண்ட மம்மூட்டி, தனது மேனேஜரிடம் கொரோனா பீதி போன பின்னர் அந்த சிறுமியை வீட்டுக்கு அழைத்து வர ஏற்பாடு செய்துள்ளார். இந்த தகவலை மம்மூட்டியின் மேலாளர் ஹமீது அலியை தொடர்பு கொண்டு கூறியுள்ளார்.

READ MORE ABOUT :

More Cinema News