கடந்த மாதம் சாலையில் அசுர வேகத்தில் கார்களை ஓட்டியது நானும் துல்கர் சல்மானும் தான் என்று நடிகர் பிருத்விராஜ் ஒப்புக் கொண்டுள்ளார்.
கடந்த மாதம் கேரளாவிலுள்ள கோட்டயம் எம்.சி. சாலையில் 2 சொகுசு கார்கள் மின்னல் வேகத்தில் போட்டி போட்டுக் கொண்டு பாய்ந்து சென்றன. அதில் ஒன்று லம்போர்கினி, இன்னொன்று போர்ஷே. கார் செல்லும் வேகத்தை பார்த்து சாலையில் சென்று கொண்டிருந்தவர்கள் பீதியடைந்தனர். காரை ஓட்டியவர்கள் யார் என்று தெரியாமல் இருந்தது.
ஆனால் அந்த காரை ஓட்டியவர்களை அந்த வழியாக பைக்கில் சென்ற ஒருவர் கண்டுபிடித்து விட்டார். உடனே அந்த கார்களை பைக்கில் விரட்டி சென்று அந்த வாலிபர் தனது செல்போனில் வீடியோ எடுத்தார். பின்னர் அந்த வீடியோவை சமூக இணையதளங்களில் வெளியிட்ட அந்த வாலிபர், நடிகர்கள் பிருத்விராஜும், துல்கர் சல்மானும் தான் கார்களை ஓட்டிச்சென்றனர் என குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து அந்த வீடியோ வைரலானது. போக்குவரத்து விதிகளை மீறி அதிவேகத்தில் சென்ற இருவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் கருத்து தெரிவித்தனர். இதுகுறித்து அறிந்ததும் மோட்டார் போக்குவரத்து துறை அதிகாரிகள் பிருத்விராஜ் மற்றும் துல்கர் சல்மானின் வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தினர். ஆனால் சம்பவம் நடந்து 1 மாதத்திற்கு மேல் ஆகியும் இது குறித்து பிருத்விராஜோ அல்லது துல்கர் சல்மானோ எதுவும் தெரிவிக்காமல் இருந்தனர்.
இந்நிலையில் ஒரு டிவிக்கு பேட்டியளித்த நடிகர் பிருத்விராஜ், கடந்த மாதம் கோட்டயத்தில் அதிவேகத்தில் கார்களை ஓட்டியது தானும், துல்கர் சல்மானும் தான் என்று ஒப்புக்கொண்டுள்ளார். எர்ணாகுளத்திலிருந்து கோட்டயம் பாலாவுக்கு இருவரும் சென்றதாகவும், ஆனால் சட்டத்தை மீறி அதிவேகத்தில் செல்லவில்லை என்றும் அவர் கூறினார். போக்குவரத்து துறை அதிகாரிகள் தங்களது வீட்டுக்கு வந்து விசாரித்தது உண்மை தான். ஆனால் நாங்கள் நல்ல பிள்ளைகள் என தெரிந்ததால் அவர்கள் சென்று விட்டனர் என்று நடிகர் பிருத்விராஜ் கூறினார்.