பிரபல நடிகை பலாத்கார வழக்கு 2 நட்சத்திரங்கள் திடீர் பல்டி

by Nishanth, Sep 17, 2020, 21:09 PM IST

பிரபல மலையாள நடிகை பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் இன்று நடந்த விசாரணையின் போது நடிகர் சித்திக் மற்றும் நடிகை பாமா ஆகியோர் பல்டி அடித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 3 வருடங்களுக்கு முன் கொச்சியில் பிரபல நடிகை பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கு எர்ணாகுளத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு விசாரணையில் இதுவரை நடிகை மஞ்சு வாரியர், ரம்யா நம்பீசன், ரீமா கல்லிங்கல் உள்பட மலையாள சினிமாவை சேர்ந்த ஏராளமான நடிகர் நடிகைகள் நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்தனர். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள நடிகர் திலீப்புக்கும், பாதிக்கப்பட்ட நடிகைக்கும் இடையே இருந்த தகராறு குறித்து பல நட்சத்திரங்கள் நீதிமன்றத்தில் வாக்குமூலம் கொடுத்தனர்.


கடந்த சில வருடங்களுக்கு முன் கொச்சியில் மலையாள நடிகர் சங்க கலை நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி ஒரு ஓட்டலில் ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. அப்போது நடிகர் திலீப்புக்கும், பாதிக்கப்பட்ட நடிகைக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் அன்றைய ஒத்திகையில் கலந்து கொண்ட நடிகர் நடிகைகள் உட்பட அனைவரிடமும் விசாரணை நடத்தினர்.
அப்போது அந்த தகராறை தாங்கள் பார்த்ததாக சில நடிகர், நடிகைகள் மற்றும் கலைஞர்கள் கூறினர். இதையடுத்து அவர்கள் அனைவரும் போலீஸ் தரப்பு சாட்சிகளாக சேர்க்கப்பட்டனர். இவர்களில் நடிகர் சித்திக்கும், நடிகை பாமாவும் உண்டு. இந்நிலையில் இன்று இந்த வழக்கு தொடர்பான விசாரணை நடந்தது. இன்றைய விசாரணைக்காக நடிகர் சித்திக் மற்றும் நடிகை பாமா ஆகியோர் ஆஜரானார்கள். அப்போது பாதிக்கப்பட்ட நடிகை மற்றும் திலீப் இடையே நடந்த மோதல் சம்பவம் குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது என்று கூறினர். இதையடுத்து இவர்கள் இருவரும் பிறழ் சாட்சிகளாக அறிவிக்கப்பட்டனர்.

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>More Cinema News

அதிகம் படித்தவை