பிரபல மலையாள நடிகை பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் நீதிமன்றத்தில் பல்டி அடித்த நடிகை பாமாவுக்கு எதிர்ப்பு வலுக்கிறது.பிரபல மலையாள நடிகை பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கு எர்ணாகுளத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கின் முதற்கட்ட விசாரணையின் போது மலையாள திரையுலகைச் சேர்ந்த நடிகைகள் மஞ்சுவாரியர், ரம்யா நம்பீசன், ரீமா கல்லிங்கல் உள்பட ஏராளமான நட்சத்திரங்கள் ஏற்கனவே ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர். இந்த வழக்கில் சதித்திட்டம் தீட்டியதாகக் கருதப்படும் நடிகர் திலீப்புக்கும், பாதிக்கப்பட்ட நடிகைக்கும் இருந்த பிரச்சினை குறித்து பலர் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்தனர்.
கடந்த சில வருடங்களுக்கு முன்பு மலையாள நடிகர் சங்க கலை நிகழ்ச்சி ஒத்திகையின் போது நடிகர் திலீப்புக்கும், பாதிக்கப்பட்ட நடிகைக்கும் இடையே வாக்குவாதம் நடந்ததாகக் கூறப்படுகிறது. இதைப் பார்த்ததாக நடிகை பாமா, நடிகர் சித்திக் உள்படச் சிலர் போலீசிடம் தெரிவித்திருந்தனர். இதையடுத்து இவர்கள் போலீஸ் தரப்பு சாட்சிகளாகச் சேர்க்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் நடிகை பாமாவும், நடிகர் சித்திக்கும் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். அப்போது இருவருமே அந்த சம்பவம் குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது என்று கூறி பல்டி அடித்தனர். இதையடுத்து இவர்கள் இருவரும் பிறழ் சாட்சிகளாக அறிவிக்கப்பட்டனர்.
நடிகை பாமா பாதிக்கப்பட்ட நடிகைக்கு மிகவும் நெருக்கமான தோழியாக இருந்தார். இந்நிலையில் அவர் நீதிமன்றத்தில் பல்டி அடித்தது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக நடிகை ரேவதி ஏற்கனவே கடும் வேதனை தெரிவித்தார். 'சினிமா உலகைச் சேர்ந்தவர்கள் எவ்வளவு நெருக்கமாக இருந்தாலும் அவர்களை நம்ப முடியாது என்பதற்கு இது மிகுந்த உதாரணமாக உள்ளது. நடிகர் சித்திக் பல்டி அடித்ததற்கு ஒரு காரணம் இருக்கிறது. ஆனால் பாதிக்கப்பட்ட நடிகைக்கு மிக நெருக்கமாக இருந்த பாமா பல்டி அடித்ததை என்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் நீதிமன்றத்தில் பல்டி அடித்த பாமாவுக்கு மேலும் எதிர்ப்பு வலுக்கிறது. பிரபல நடிகைகள் ரம்யா நம்பீசன், ரீமா கல்லிங்கல் உள்படப் பலர் பாமாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். நடிகை ரம்யா நம்பீசன் தனது பேஸ்புக்கில் கூறுகையில், 'உண்மை வேதனை தரும். ஆனால் நம்பவைத்து ஏமாற்றுவதைப் பொறுத்துக்கொள்ள முடியாது. பாதிக்கப்பட்ட நடிகையுடன் ஒன்றாக இணைந்து தானும் நீதிக்காகப் போராடுவதாக நம்பிக்கை தந்த ஒருவர் திடீரென ஏமாற்றும் போது கடும் வேதனை அளிக்கிறது.
நீதிமன்றத்தில் பலர் பல்டி அடித்துப் பிறழ் சாட்சிகளாக மாறியதை குறித்துக் கேள்விப்பட்டு இருக்கிறோம். ஆனால் பாதிக்கப்பட்ட நடிகையுடன் நெருக்கமாக இருந்து கொண்டு அவரால் எப்படி ஏமாற்ற முடிந்தது எனத் தெரியவில்லை. உண்மை ஒருநாள் வெற்றி பெறும். பாதிக்கப்பட்ட நடிகைக்காகவும், நமது சமூகத்தில் இதுபோல துன்பப்படும் எல்லா பெண்களுக்காகவும் இந்த போராட்டம் தொடரும் என்று நடிகை ரம்யா நம்பீசன் குறிப்பிட்டுள்ளார். இதே போல ரீமா கல்லிங்கலும் பாமாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதற்கிடையே சமூக இணையதளங்களிலும் பாமாவுக்கு கடும் கண்டனம் குவிந்து வருகிறது. பாமாவை கடுமையான வார்த்தைகளால் திட்டி பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.