சினிமா வாய்ப்பை பறித்த கொரோனா.. எருமை வளர்க்கும் நடிகை..!

by Nishanth, Sep 29, 2020, 17:23 PM IST

கொரோனாவால் சினிமா வாய்ப்பு குறைந்ததைத் தொடர்ந்து பிரபல மலையாள நடிகை மஞ்சு பிள்ளை எருமைகளை வளர்க்கத் தொடங்கியுள்ளார். இதில் நல்ல லாபம் கிடைப்பதாக அவர் கூறுகிறார்.கடந்த 8 மாதங்களுக்கு மேலாக உலகையே ஆட்டிப் படைத்து வரும் கொரோனா பலரது வாழ்க்கையையும் கேள்விக்குறியாக்கி விட்டது. ஏராளமானோர் தொழிலை இழந்து நடுத்தெருவுக்கு வந்து விட்டனர். சம்பளக் குறைப்பு, ஆட்குறைப்பு எனப் பல நிறுவனங்கள் தொழிலாளர்களைப் பந்தாடி வருகின்றன. கிடைக்கிற சம்பளம் போதும் என்ற மனநிலைக்குத் தொழிலாளர்களும் வந்துவிட்டனர்.மற்ற துறைகளைப் போலவே சினிமாவுக்கும் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் பலரும் சினிமாவை மறந்து வேறு தொழிலுக்குச் சென்று வருகின்றனர்.

கேரளாவில் பல நடிகர்கள் மீன், கருவாடு வியாபாரத்தைத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில் பிரபல மலையாள நடிகை மஞ்சு பிள்ளை எருமை வியாபாரத்தைத் தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருகிறார். இவருக்குத் திருவனந்தபுரம் மாவட்டம் ஆற்றிங்கல் என்ற இடத்திற்கு அருகே உள்ள அவனவஞ்சேரி என்ற பகுதியில் பண்ணைத் தோட்டம் உள்ளது.கொரோனா லாக்டவுனால் சினிமா மற்றும் டிவி சீரியல் வாய்ப்புகள் குறைந்ததால் என்ன செய்வது யோசித்தபோது தான் எருமைகளை வாங்கி வளர்த்து விற்பனை செய்யலாம் என இவரது கணவரும், கேமராமேனுமான சுஜித் வாசுதேவன் ஒரு ஐடியா கொடுத்தார். உடனடியாக மஞ்சு பிள்ளையும் களத்தில் இறங்கினார்.

நல்ல ரக எருமைகள் எங்குக் கிடைக்கும் என விசாரித்தபோது, ஹரியானா மாநிலத்தில் 'முரா' என்ற உயர் ரக எருமைகள் கிடைக்கும் எனத் தெரியவந்தது. இதையடுத்து உடனடியாக அங்கிருந்து முதல் கட்டமாக 50 எருமைகளை வாங்கினார். தற்போது இந்த எருமை வியாபாரம் நல்ல முறையில் சென்று கொண்டிருப்பதாக நடிகை மஞ்சு பிள்ளை கூறுகிறார். இவரது பண்ணையில் எருமைகள் மட்டுமில்லாமல், மீன் வளர்ப்பு, காய்கறித் தோட்டம், பழத்தோட்டம் ஆகியவையும் உள்ளன. இனி சினிமா வாய்ப்பு இல்லாவிட்டாலும் எனக்குக் கவலை இல்லை, இதுவே போதும் என்கிறார் இவர்.

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

More Cinema News

அதிகம் படித்தவை