கொரோனாவால் சிகிச்சை கிடைக்காமல் அவதி... ஆட்டோ டிரைவருக்கு இலவச இதய அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்த நடிகர்..!

Malayalam actor mammootty helps auto driver for free heart surgery

by Nishanth, Sep 30, 2020, 15:00 PM IST

கொரோனாவால் அறுவை சிகிச்சை செய்ய முடியாமல் அவதிப்பட்டு வந்த ஆட்டோ தொழிலாளிக்கு நடிகர் மம்மூட்டி இலவசமாக இதய அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்து கொடுத்தார்.கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்தவர் பிரசாத். ஆட்டோ டிரைவரான இவருக்கு நீண்ட காலமாக இதய நோய் இருந்து வந்தது.

கடந்த சில மாதங்களுக்கு முன் இவரது உடல்நிலை மோசமடைந்தது. இதையடுத்து அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சென்றபோது உடனடியாக இதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தினர். இதையடுத்து திருச்சூரில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்குச் சென்றபோது அங்கு கொரோனா நோயாளிகளுக்கு மட்டுமே சிகிச்சை அளிக்கப்படுவதாகவும், இதய அறுவை சிகிச்சையை நிறுத்தி வைத்துள்ளதாகவும் கூறியுள்ளனர்.

இதனால் எர்ணாகுளம், கோழிக்கோடு உள்படப் பல பகுதிகளிலுள்ள மருத்துவமனைகளுக்குச் சென்ற போதும் இதே பதில் தான் கிடைத்தது. சில தனியார் மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சை செய்ய முன் வந்த போதிலும் பல லட்சம் செலவாகும் என்று கூறியதால் பிரசாத்துக்கு அறுவைசிகிச்சை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. நாளுக்கு நாள் இவரது உடல்நிலை மோசமடைந்தது.இந்த நிலையில் தான் அப்பகுதியைச் சேர்ந்த நடிகர் மம்மூட்டியின் தீவிர ரசிகரான ஒருவர், மம்மூட்டியைத் தொடர்பு கொண்டால் இலவச அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்வார் என்று கூறினார்.

இதையடுத்து பிரசாத்தின் உறவினர்கள் மம்மூட்டியின் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டனர். சிகிச்சை குறித்த விவரங்களை அனுப்பி வைக்குமாறு அங்கிருந்தவர்கள் கூறினர். இதையடுத்து சிகிச்சை விவரங்களை பிரசாத் அனுப்பி வைத்தார். உடனடியாக அறுவை சிகிச்சை தேவை என்பதால் இந்த விவரம் மம்மூட்டியிடம் தெரிவிக்கப்பட்டது.
அவர் உடனடியாக திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையுடன் கொண்டு இலவச அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தார். இந்த மருத்துவமனையுடன் இணைந்து கடந்த 13 வருடங்களாக மம்மூட்டி ஏராளமானோருக்கு இலவசமாக இதய அறுவை சிகிச்சைக்கு உதவியுள்ளார். இதுவரை 250 க்கும் மேற்பட்டோருக்கு மம்மூட்டி இலவச அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

More Cinema News

அதிகம் படித்தவை