சமீபத்தில் உடல்நலக் குறைவால் இறந்தது நடிகை மிஷ்டி முகர்ஜி தான், நான் அல்ல என்று வேதனையுடன் கூறுகிறார் மலையாளத்தில் பிருத்விராஜுடன் நாயகியாக நடித்த மிஷ்டி சக்கரவர்த்தி.
மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர் மிஷ்டி முகர்ஜி (27). இவர் 'மேம் கிருஷ்ணா ஹும்', 'லைஃப் கி தோ லக் கயீ' உள்பட சில இந்திப் படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் உடல் நலக்குறைவால் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர், கடந்த சில தினங்களுக்கு முன் சிகிச்சை பலனளிக்காமல் மரணமடைந்தார். மிஷ்டி முகர்ஜி தன்னுடைய உடல் எடையை குறைப்பதற்காக கீட்டோ டயட் இருந்ததாகவும், அதனால் சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டு மரணம் அடைந்ததாகவும் அவரது உறவினர்கள் கூறுகின்றனர்.
இது பெரும் துரதிர்ஷ்டவசமான சம்பவம் ஆகும். எங்களுடைய நஷ்டத்தை யாராலும் ஈடுகட்ட முடியாது. கடைசி வரை மிகவும் வேதனைப்பட்டு தான் அவர் இறந்தார் என்று மிஷ்டி முகர்ஜியின் உறவினர்கள் கூறுகின்றனர். மிஷ்டி முகர்ஜி இறந்த செய்தியை பெரும்பாலான பத்திரிகைகள் வெளியிட்ட்டிருந்தன. ஆனால் ஒரு சில பத்திரிகை மற்றும் ஆன்லைன் மீடியாக்களில் மிஷ்டி முகர்ஜி என்பதற்கு பதிலாக மிஷ்டி சக்கரவர்த்தி என்று குறிப்பிட்டிருந்தனர். மேலும் செய்தியுடன் தவறுதலாக மிஷ்டி சக்கரவர்த்தியின் படத்தையும் வெளியிட்டனர்.
இந்த மிஷ்டி சக்ரவர்த்தியும் மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்தவர் தான். இவர் மலையாளத்தில் பிருத்விராஜுடன் 'ஆதம் ஜான்' என்ற படத்தில் நாயகியாக நடித்துள்ளார். இவர் இறந்ததாக செய்தியை பார்த்த பலரும் மிஷ்டி சக்கரவர்த்தியை தொடர்புகொண்டு விவரத்தை கேட்டுள்ளனர். அதன்பிறகே, தான் இறந்ததாக தவறான செய்தி வெளியானது குறித்து மிஷ்டி சக்கரவர்த்திக்கு தெரியவந்தது. 'சில செய்திகளின் படி நான் இறந்து விட்டேன். ஆனால் கடவுள் அருளால் நான் நலமுடன் இருக்கிறேன் இருக்கிறேன். இனியும் நீண்ட நாட்கள் வாழ வேண்டியுள்ளது என்று அவர் தனது பேஸ்புக்கில் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.