பிரபல பாடகரின் கார் விபத்தில் சிக்கியது

by Nishanth, Nov 3, 2020, 11:55 AM IST

பிரபல சினிமா பாடகர் விஜய் யேசுதாசின் கார் நேற்று நள்ளிரவு ஆலப்புழா அருகே விபத்தில் சிக்கியது. குறுக்கு ரோட்டில் இருந்து திடீரென வந்த ஒரு கார் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டது. இதில் இரு கார்களும் சேதமடைந்த போதிலும் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.பிரபல பழம்பெரும் சினிமா பின்னணி பாடகரும், கர்நாடக இசைக் கலைஞருமான கே.ஜே. யேசுதாசின் மகன் விஜய் யேசுதாஸ்.

இவர் தமிழ், மலையாளம், கன்னடம் உட்பட பல மொழிகளில் ஏராளமான சினிமா பாடல்களை பாடியுள்ளார். தனுஷின் மாரி படத்தில் இவர் வில்லனாகவும் நடித்துள்ளார். மலையாளத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட சூப்பர் ஹிட் பாடல்களை இவர் பாடியுள்ள போதிலும், சமீபத்தில் மலையாள மொழியில் இனி பாட மாட்டேன் என்று கூறியது மலையாள சினிமா உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.

தமிழ், தெலுங்கு சினிமாக்களைப் போல மலையாள சினிமாவில் பாடகர்களுக்கும், இசையமைப்பாளர்களுக்கும் போதிய மரியாதை இல்லை என்பதால் இந்த முடிவை எடுத்ததாக அவர் கூறினார். சமீபத்தில் இவர் கொச்சியில் தனது நண்பர்களுடன் சேர்ந்து பிரம்மாண்டமான சலூன் ஒன்றைத் தொடங்கியுள்ளார்.இந்நிலையில் நேற்று திருவனந்தபுரத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் இரவில் தனது நண்பருடன் விஜய் யேசுதாஸ் கொச்சிக்கு காரில் புறப்பட்டார். நள்ளிரவு 11.30 மணியளவில் ஆலப்புழா அருகே உள்ள துரவூர் என்ற பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் கார் சென்று கொண்டிருந்தது.

அப்போது அங்குள்ள ஒரு குறுக்கு ரோட்டிலிருந்து வேகமாக வந்த ஒரு கார் தேசிய நெடுஞ்சாலையில் திரும்பியது. அப்போது எதிர்பாரா விதமாக அந்த கார் விஜய் யேசுதாஸின் கார் மீது மோதியது. இதில் இரண்டு கார்களும் பலத்த சேதமடைந்தன. ஆனால் இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக கார்களில் இருந்த யாரும் காயமடையவில்லை. இது குறித்து அறிந்ததும் ஆலப்புழா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் விஜய் யேசுதாஸ் வேறு காரில் புறப்பட்டு சென்றார். இந்த சம்பவம் குறித்து ஆலப்புழா போலீசார் விசாரித்து வருகின்றனர்.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை