தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து ஞாயிறு முதல் தமிழகத்தில் தெலுங்கு படங்கள் வெளியாகாது என்று தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 1,100 சினிமா தியேட்டர்களிலும் டிஜிட்டல் முறையில் படங்கள் திரையிடப்படுகின்றன. தனியார் நிறுவனங்கள் இந்த சேவையை செய்து வருகின்றன. இதற்கு ஆகும் செலவுகளை பட தயாரிப்பாளர்களே செய்து வருகிறார்கள்.
டிஜிட்டல் முறையில் திரைப்படங்களை திரையிட வசூலிக்கப்படும் கட்டணம் மிகவும் அதிகமாக உள்ளதாகவும், விளம்பர கட்டணத்தையும் டிஜிட்டல் சேவை நிறுவனங்களே பெற்றுக் கொள்கின்றன என்றும் இதனால் தயாரிப்பாளர்கள் தங்கள் படங்களை திரையிட லட்சக்கணக்கான ரூபாய் செலவு செய்யும் நிலை உள்ளது.
திரையங்குகளில் டிஜிட்டல் முறையில் படங்கள் திரையிடும் நிறுவனங்கள் கட்டணத்தை குறைக்கக் கோரி பட தயாரிப்பாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
திரைப்பட தயாரிப்பாளர்கள் போராட்டத்தால் மார்ச் 1-ந் தேதி முதல் திரையரங்குகளில் புதிய திரைபடங்கள் எதுவும் வெளியாகவில்லை. பட அதிபர்களுக்கு கைக்கொடுக்கும் வகையில் மார்ச் 16-ஆம் தேதி முதல் சினிமா படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. சுமார் ஒரு மாத காலமாக போராட்டம் நடந்து வருவதால் தமிழ் திரையுலகம் முற்றிலும் முடங்கியது.
தெலுங்கு, இந்தி, ஹாலிவுட் படங்கள் மட்டுமே அவ்வபோது வெளியாகி வருகின்றன.
இந்தநிலையில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து ஞாயிறு முதல் தமிழகத்தில் தெலுங்கு படங்கள் வெளியாகாது என்று தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது.
இதற்கிடையே காவிரி மேலாண்மை அமைக்க தமிழகம் முழுவதும் பல்வேறு தரப்பினர் போராட்டங்களை நடத்திய வண்ணம் வருகின்றனர். இதன் எதிரொலியாக திரையுலகினரும்
ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளனர். நாளை வியாழக்கிழமை ஏப்ரல் 5ம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே திட்டமிட்டபடி நடக்கும் என்பதை அணைத்து தரப்புகள் சார்பாக நடிகர் சங்க பொதுசெயலாளர் விஷால் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.