ஆண்டவர் வருகை ,பாலா -ஆரி மோதல் - நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது ?நாள் 90

by Mahadevan CM, Jan 3, 2021, 12:53 PM IST

ஆண்டவர் தினம். புத்தாண்டு வாழ்த்துக்களோடு வருகை புரிந்தார். பிண்ணனியில் இளமை இதோ இதோ ஆரம்ப இசையுடன் அதற்கு கமலே நடந்து வந்தது புதுமையாக இருந்தது. சென்ற வருடத்தை பற்றியும், புதிய வருடத்தை பற்றியும் நம்பிக்கை அளித்து பேசினார்.

வெள்ளிக்கிழமை நிகழ்வுகள்

பஞ்சாயத்து நாளே தொடர்ந்து. பாத்ரூம் ஏரியாவில் ரம்யாவிடம் பேசிக்கொண்டிருந்தார் ஆரி. ரியோ கொடுத்த விளக்கத்தை பற்றியும், பாலாவை பற்றியும் பேசுவதை அறைக்கு வெளியே நின்று கேட்டுக்கொண்டிருந்தார் பாலா. ரியோவை பற்றிய ஆரியின் கருத்துக்கு ஆதரவாக தான் ரம்யாவும் பேசினார். ஆனால் திடீரென்று ரம்யாவின் மேலும் குறை சொல்ல ஆரம்பித்தார் ஆரி. ஆஜித்தை நமினேட் செய்யவில்லை, பாலாவை நாமினேட் செய்யவில்லை. ரம்யா ஒன்சைடாக இருக்கிறார் என்பது குற்றச்சாட்டு. இந்த குற்றச்சாட்டை முதன்முதலில் அவர் வைத்தது 5வது வாரத்தில். சம்யுக்தா கேப்டன்சியில். வழக்கு மன்றம் டாஸ்க் நடந்த போது தனக்கு ஆதரவாக வாதாடவில்லை என்பதைச் சொல்லி, ஒன்சைடாக விளையாடுவதாக குற்றம் சொன்னார். அதிலிருந்து தான் ஆரி vs ரம்யா எதிர்ப்பு உண்டானது. ஆனால் இந்த விவாதம் நமக்கு காண்பிக்கப்படவில்லை. ஆனால் இந்த விவாதத்தை பற்றி பாலா ஒரு முறை பதிவு செய்கிறார்.

இத்தனை வாரங்கள் கழித்து மீண்டும் அதே குற்றச்சாட்டு. குறைந்தபட்சம் அன்று நடந்த விவாதத்தை காண்பித்து இருந்தால் ஆரியின் மேலான ரம்யாவின் கோபத்துக்கு ஒரு காரணமாவது மக்களுக்கு தெரிந்திருக்கும்.

அந்த குற்றச்சாட்டை கேட்டு ரம்யாவும் கோபம் கொள்கிறார். குற்றச்சாட்டு பற்றிய விளக்கம் கேட்கும் போதெல்லாம் "இது எனது கருத்து" "நான் பதிவு செய்யறேன்" என்று சொல்வது ஆரியின் வழக்கம். நேற்றும் அதை சொல்கிறார். பதிலுக்கு இனி தானும் இதே போல பதிவு செய்யப் போவதாக சொல்கிறார். இவர்கள் பேசும் சத்தம் கேட்டு வீட்டில் இருக்கும் மற்றவர்களும் அங்கே வருகின்றனர்.

அங்கே விவாதம் முடிந்து அனைவரும் தூங்கச் செல்லும் போது மீண்டும் ஆரியிடம் வம்புக்கு போனது பாலா தான். மீண்டும் மீண்டும் ஒரே தவறை செய்து கொண்டிருக்கிறார் பாலா. அதுவும் ஷிவானியை பற்றி பேசியது தேவையற்றது. அதற்கு ஆரியின் எதிர்வினையும் அவர் சொன்ன வார்த்தைகளும் மிகவும் தவறானது. இவர்கள் இருவரின் சண்டையில் ஷிவானியை இழுத்திருக்க வேண்டிய்ச்தில்லை. அப்போதும் தலையனையை தூக்கி எறிந்து விதிமீறல் செய்தார் பாலா.

அடுத்த நாள் தனது வார்த்தைகளுக்காக ஷிவானியிடம் மன்னிப்பும் கேட்டார்.ஆரியின் குற்றச்சாட்டுகளை பற்றி கொஞ்சம் அலசி விடுவோம்.ஆரி மற்றவர்கள் மேல் வைக்கும் விமர்சனம் பெரும்பாலும் ஹைபொதெட்டிகல் முறையிலேயே இருக்கும். சக ஹவுஸ்மேட்ஸின் ஏதோ ஒரு செயலுக்கு உள்நோக்கம் கற்பிப்பது தான் அவருடைய குற்றச்சாட்டின் நோக்கமாக இருக்கும். முந்தைய நாள் நிகழ்வை எடுத்துக் கொள்வோம். ஹவுஸ் க்ளீனிங் வேலையில் பாலா சுணக்கம் காட்டினார். டாஸ்க்கில் விதிமீறல் செய்தார் என்பது தான் நாமினேஷ்ன் நடக்கும் போது பாலா மீது ஆரியுடைய குற்றச்சாட்டு. அதில் விதிமீறலை ஏற்றுக்கொள்ளும் பாலா வேலை செய்யவில்லை என்பதை ஏற்றுக் கொள்ளவில்லை. இந்த குற்றச்சாட்டை சொல்வதற்கு சென்ற வாரம் நடந்ததை இழுக்கும் போது தான் பாலா அதை ஆட்சேபிக்கிறான். சென்ற வாரம் ஹவுஸ் க்ளீனிங் இரண்டு முறை தான் நடந்தது என்பது ஆரியின் பதிவு. ஆனால் சென்ற வாரத்தின் பெஸ்ட் பர்பாமன்ஸ்க்கு பாலாவை நாமினேட் செய்தவர்களில் ஆரியும் ஒருவர். பாலாவின் கேப்டன்சியை பாராட்டி பதிவு செய்துவிட்டு, ஒரு வாரம் முடிந்து மீண்டும் அதில் குற்றம் சொல்வதை ஏற்றுக் கொள்ளமுடியவில்லை.

ஆரியின் குற்றச்சாட்டை பாலா எப்படி ஏற்றுக் கொள்ளவில்லையோ, அதே போல் ஆரியை நாமினேஷன் செய்ய ரியோ சொன்ன காரணத்தையும் ஆரி ஏற்றுக் கொள்ளவில்லை. இதில் இருந்த வித்தியாசம் ஆரி, பாலா இருவரும் இதை கையாண்ட விதம். பாலா குறுக்கீடு செய்து பெயரை கெடுத்துக் கொண்டார். ஆரி நாமினேஷன் முடிந்த பிறகு ரியோவை அழைத்து விளக்கம் கேட்கிறார்.

ரியோவின் நாமினேஷன் காரணத்தில் பிழை இருக்கிறது என்பதையும் மறுக்க முடியாது. அதே போல் தான் பாலா மீதான ஆரியின் நாமினேஷன் காரணமும்.. ரியோ நாமினேஷனுக்கான விளக்கம் கொடுக்கும் போது அவர் சொன்ன காரணம் சரியானது. ப்ரீஸ் டாஸ்க்கின் போது சோம், ரியோ, ரம்யா, கேப்பி, ஆஜித் போன்றவர்கள் ஜாலியாக விளையாடிய போது ஆரி அப்படி செய்யவில்லை என்பது ரியோவின் குற்றச்சாட்டு. அதை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் அதற்கும் விவாதம் தான் செய்தார் ஆரி. தான் ரூல்ஸை பாலோ செய்தது உங்கள் கண்ணுக்கு தெரியவில்லையா என்பது அவரின் எதிர்கேள்வி. மற்றவர்களை போல் பார்வையாளர்களை சிரிக்க வைக்கும் முயற்சியில் ஆரி ஈடுபடவில்லை. இந்த விளக்கத்தை ரியோ பலமுறை சொன்னார் என்பது குறிப்பிடத்தக்கது.

ப்ரீஸ் டாஸ்க்கின் கண்ட்ரோல் முழுவதும் பிக்பாஸிடம் மட்டுமே இருக்கிறது. அவர் சொல்வதைத் தான் நான் செய்ய முடியும் என்ற ஆரியின் வாதத்தில் லாஜிக் இருக்கிறது. ஆனால் பிக்பாஸ் ஒருவரை ப்ரீஸ் செய்யும் போது அருகில் இருப்பவர்கள் அவரை எதாவது செய்ய வேண்டும் அப்போது தான் பிக்பாஸால் அடுத்த கமெண்ட் கொடுக்க முடியும். ஒரு வேளை ஆரி சொல்வது போல அனைவரும் தனித்தனியாக விளையாடினால் எப்படி சுவாரஸ்யமாக இருக்கும். எனவே இங்கே ரியோவின் காரணம் சரியானது. (இந்த விளக்கத்தை ஆரியை போல, கமலும் ஏற்றுக் கொள்ளவில்லை). ஆனால் ரியோ செய்த ஒரே பிழை நாமினேஷன் செய்யும் போது இதை தெளிவாக சொல்லாதது மட்டுமே.

அதே போல் "என்னைத் தவிர வேறு யாரும் போரிங் பர்பாமன்ஸ் கொடுக்கவில்லையா" என்று ஆரி கேட்பது இது முதல் முறையல்ல. ஆரி ஜெயிலுக்கு போகும் நிலை வரும்போதெல்லாம் இந்த கேள்வியை கேட்கிறார். ஆரிக்கு இருக்கும் பார்வை போலவே ரியோவுக்கும் இருக்கிறது. ரியோவின் குற்றச்சாட்டிற்கு உள்நோக்கம் கற்பித்தால், அது எல்லாருக்கும் பொருந்துமே. ஹவுஸ்மேட்ஸில் ஆரி, அனிதா, பாலா மூவரை தவிர நாமினேஷன் காரணங்களை யாருமே எதிர்த்து பேசுவதில்லை. நாமினேஷன் செய்தவர்களின் மீது உள்நோக்கம் கற்பிப்பது இல்லை.

சென்ற வாரம் ஓபன் நாமினேஷன் நடக்கும் போது ஷிவானியை நாமினேட் செய்த ரியோ, இதுவரை தான் ஷிவானியை நாமினேட் செய்ததில்லை என்று சொல்லியிருக்கிறார். அது எப்படி சொல்லலாம் என்று ரியோவிடம் விவாதம் செய்தார் ஆரி. ஷிவானியிடம் சொன்னது சேஃப் கேம் என்று புதிதாக ஒரு குற்றம்சாட்டினார். அதற்கான விளக்கத்தை ரியோ சொல்வதற்கு முன்பே முன்முடிவோட தான் பேசினார் ஆரி.

தன்னை போலவே மற்றவர்களும் விளையாட வேண்டும். சிந்திக்க வேண்டும், செயல்பட வேண்டும் என்று ஆரி நினைக்கிறார். எந்த குறையாக இருந்தாலும் முகத்துக்கு நேராக சொல்வது ஆரியின் ஸ்டைலாக இருக்கலாம். அதற்காக எல்லாரும் அப்படித்தான் சொல்ல வேண்டும் என்று ஆரி எதிர்பார்க்கிறார். அப்படி சொல்லாதவர்கள் சேஃப் கேம் விளையாடுவதாக குற்றம் சொல்கிறார். ஆரிக்கு யாருமே தேவையில்லை அவர் அப்படி செய்யலாம். மனிதர்கள் வேண்டும் என்று நினைப்பவர்கள் சற்று டிபளமேட்டிக்காக பேசுவதை எப்படி குறை சொல்ல முடியும். வயதில் சிறியவளான ஷிவானி மனது வருத்தப்படக் கூடாது என்ற எண்ணத்தில் தான் ரியோ சொல்லியிருக்கக் கூடும். அதிலெந்த தவறும் இல்லை.

நாமினேஷனுக்கு பிறகு ரியோ எப்படி தன் காரணத்தை மாற்றிக் கொண்டாரோ அதே போல் ஆரியும் புது காரணம் ஒன்றைச் சொன்னார். அதாவது இந்த வார ஆரம்பத்தில் கிச்சன் டீமிற்கு ஆள் எடுக்கும் போது பாலா கை தூக்கவில்லை. எனவே அவரிடம் இன்வால்வ்மெண்ட் இல்லை என்பது ஆரியின் குற்றச்சாட்டு. இதுவும் ஹைபொதெட்டிக்கல் கேள்வி தான். ஒருவேளை கிச்சன் டீமிற்கு கை தூக்கி இருந்தால், பாத்ரூம் டீமிற்கு போக மறுக்கிறார் என்று சொல்லவும் முடியும். வேலையை கற்றுக் கொள்வதும் அவரவர் விருப்பம் சார்ந்த விஷயம். கற்றுக் கொள்ள விரும்ப்பம் காட்டவில்லை என்பதை ஒரு குற்றச்சாட்டாக சொல்ல முடியாது. ஆனால் ஆரி அதைத்தான் நேற்று முந்தினம் செய்தார். பாலாவின் செயலுக்கு ஒரு உள்நொக்கத்தை கற்பித்து அதை மீண்டும் மீண்டும் பேசி பதிவு செய்வது தான் அவருடைய ஸ்ட்ராட்டஜி. ரியோவின் செயலுக்கு சேஃப் கேம் என்ற முத்திரை குத்தி அதையும் மீண்டும் மீண்டும் பேசி பதிவு செய்வது தான் அவருடைய ஸ்ட்ராட்டஜி.

ஒரு பக்கம் ரியோவின் விளக்கத்தை ஆரி ஏற்றுக் கொள்ளாததைப் போல், ஆரியின் விளக்கத்தை பாலாவும் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆரி, பாலா இருவருமே செய்தது ஒரே விஷயம் தான். ஆனால் செய்த முறையில் தான் பாலா குற்றவாளி ஆனார். அதே சமயம் தன்னிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு விளக்கம் அளித்ததோடு ரியோ நின்றுவிட்டார். ஆனால் ஆரியிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சரியான விளக்கம் அளிக்காததுடன் புதிது புதிதாக குற்றம் சுமத்த்தி பாலாவை தூண்டிவிடும் முயற்சியில் ஈடுபட்டார் ஆரி.

இது போன்ற விவாதங்களில் ஆரி மிகவும் கூலாக இருக்கிறார், மன உறுதியுடன் இருக்கிறார் என்பது உண்மை. அதில் மாற்றுக் கருத்தில்லை. ஆரி சபையில் வைக்கும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டவை. அவர் பாலாவின் மேல் வைக்கும் குற்றச்சாட்டாகட்டும், ரியோவின் மேல் வைக்கும் குற்றச்சாட்டாகட்டும் இரண்டுமே ஏற்கனவே தீர்மானிக்கபட்ட பாயிண்ட்ஸ். இந்த பாயிண்ட்ஸ்களை பேச வேண்டும் என்று முன்னமே தீர்மானித்து வைத்து, அப்படி இதை பேசும் போது என்னென்ன எதிர்வினைகள் வரும் என்பதையும் யோசித்து, அதற்கும் பதில் தயாரித்து வைத்துக் கொண்டு கேட்கபடும் கேள்விகள் அவை. அனிதாவிடம் கேட்கப்பட்ட கேள்வியாகட்டும், பாலா, ரியிவிடம் கேட்கப்பட்ட கேள்விகளாகட்டும் அனைத்துமே அப்படித்தான்.

இதற்கான எதிர்வினை எப்படியிருக்கும் என்பதை முன்பே கணித்து இருந்ததால் தான் ஆரியால் சம்நிலை மாறாமல் இருக்க முடிகிறது. கேள்விகள், குற்றச்சாட்டுகளை முதலிலேயே முடிவு செய்து வைத்துக் கொண்டு இடத்திற்கு ஏற்றார் போல் கேள்விகளை தேர்வு செய்து கொள்கிறார். அதனால் தான் பல வாரங்களுக்கு முன்னால் நடந்தவைகளை கூட அவரால் நினைவுபடுத்த முடிகிறது. எதிராளி என்ன பதில் சொல்வார், அவரை எப்படி மடக்கலாம் என்று யோசித்து உருவாக்கப்பட்ட துணைக்கேள்விகள் மற்றும் பதில்கள் அவை. இதை பல இடங்களில் ஆரி செய்வதை தொடர்பு படுத்திக் கொள்ளலாம். சில வாரங்களுக்கு முன் வாலண்டியர் செய்பவர்களின் வேலையை பற்றி பெஸ்ட் பர்பாமன்ஸ் இடத்தில் பேசக்கூடாது என்று பாலா ஒரு இடத்தில் சொன்ன போது, உடனடியாக தன்னுடைய கேப்டன்சியில் பாலா முரணாக பேசியதை எடுத்து சொன்னது நினைவிருக்கலாம். காரணம் அதை ஒரு பாயிண்டாக சேவ் செய்து வைத்திருந்ததால், தேவையான இடத்தில் யூஸ் செய்து கொள்கிறார்.

அதே சமயத்தில் குற்றச்சாட்டு வைக்கப்படும் நபர்கள் இந்த திடீர் தாக்குதலால் நிலைகுலைந்து போகிறார்கள். அந்த நேரத்தில் அவர்களுக்கு தோன்றும் பதிலை சொல்கிறார்கள். ஆனால் கவனமாக தயாரிக்கப்பட்ட கேள்வி என்பதால் அடுத்தடுத்து வரும் துணைக் கேள்விகள் மற்றும் லாஜிக் காரணங்களுக்கு பதில் தெரியாமல் சமநிலை தவறி கோப்பப்படுகிறார்கள். இது தான் பாலாவிற்கு நடந்தது. ரியோவிற்கு கோபம் வரும் போது அவர் அந்த இடத்தை விட்டு நகர்ந்து விடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.

அதே சமயம் இப்படியான திடீர் கேள்விகளை எதிர் கொள்ளும் போது ஆரியும் தடுமாறி இருக்கிறார். அவரும் சமநிலை தவறி இருக்கிறார். பாலாவுடனான ஒரு மோதலில், பாலா போகும் இடமெல்லாம் பின் தொடர்ந்து விளக்கம் சொல்லிக் கொண்டே இருந்தது நினைவிருக்கலாம். காரணம் அன்று பாலாவின் கேள்வி அவரை நிலைகுலையச் செய்தது. அன்று ஆரி செய்ததை போலவே நேற்று பாலா செய்தார். அதாவது ஆரி செல்லும் இடமெல்லாம் தொடர்ந்து சென்று கேள்வி கேட்டுக் கொண்டே இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆரி எப்போதும் இந்த கேம் பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்கிறார். மற்றவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை கண்கொத்தி பாம்பாக கண்காணித்துக் கொண்டே இருக்கிறார். மற்றவர்கள் செய்யும் தவறுகளை நோட் செய்து கொள்கிறார். அந்த தவறுகளை அவர் செய்வது இல்லை. (உதாரணம்: ப்ரீஸ் டாஸ்க்கில் அவருடை மகள் வந்த போதும், பிக்பாஸ் சொல்லும் வரை ப்ரீஸில் இருந்தது) அதனால் மற்றவர்களை கேள்வி கேட்கும் தகுதிக்கு தன்னை தயார் படுத்திக் கொள்கிறார். அதுதான் அவரின் ஸ்ட்ராட்டஜி, ஆயுதம். எப்போதும் ஆயுதத்துடன் இருப்பவர் தான் ஆரி.

ஆனால் மற்ற ஹவுஸ்மேட்ஸ்கள் அப்படி இல்லை. டாஸ்கின் போது தங்களது முழு பங்களிப்பை கொடுத்து விளையாடுகிறார்கள். மற்ற வேலைகளை குறைகளோடு செய்கிறார்கள். மற்றவர்களின் தவறுகளை பூதக்கண்ணாடி வைத்துப் பார்ப்பதில்லை. நாமினேஷன் நேரத்தில் தங்களுக்கு தோன்றிய பொதுவான காரணத்தை சொல்கிறார்கள். தங்களுக்கு சொல்லப்படும் காரணத்தை ஏற்றுக்கொள்கிறார்கள். அப்படி ஏற்றுக் கொள்ள முடியாத சமயங்களில் மட்டும் தனியாக புலம்பிக் கொள்கிறார்கள். மற்ற நேரங்களில் தங்களுக்கு இணக்கமான, தங்கள் அலைசரிசையோடு ஒத்துப் போகக் கூடியவர்களுடன் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். இதுவரை வந்த அனைத்து சீசன்களும் இப்படித்தான். அதாவது ஆயுதம் தேவைப்படும் நேரத்தில் எடுத்துக் கொண்டு, தேவை முடிந்ததும் கீழே வைத்து விடுகிறார்கள்.

அதனால் தான் எப்போதும் ஆயுதத்துடன் இருக்கும் ஆரியை கண்டு அவர்களுக்கு பதற்றம். பயம். கோபம். ஆரிக்கு இங்கிருக்கும் யாருமே தேவையில்லை. மற்றவர்களுக்கு அப்படியில்லை. சக மனிதர்கள் தேவை. ஆரியின் ஒரே பிரச்சினை மற்றவர்களும் தன்னை போல் இருக்க வேண்டும் என்ற ஆசை. அப்படி இல்லாததால் மற்றவர்களை விட தன்னை உயர்வாக கருதிக் கொள்கிறார். தன்னுடைய நிலைப்பாடு தான் சரி. மற்றவர்கள் தவறு என்ற ஆரியின் முடிவிற்கு இது தான் முக்கிய காரணம்.

நேற்றைய நிகழ்ச்சிக்கு வருவோம்...

குடும்பத்தினர் வந்து போனதை பற்றி கேட்டறிந்தார். ரியாவின் குறும்பு, ரியோவின் காதல் காட்சி என அவர் வர்ணித்தது அருமை. ஷிவானி முறை வரும் போது அவருக்காக பரிந்து பேசினார். அம்மாவை எதிர்த்து பேசாமல் இருந்ததற்கு ஷிவானியை பாராட்டினார். அதோடு நின்று விடாமல் ஷிவானியின் அம்மாவை வீடியோ காலில் அழைத்து பேசினார். நல்ல முயற்சி.

விவாதம் சமயங்களில் மன உறுதியுடனும், சமநிலை தவறாமலும் இருப்பதற்காக ஆரியை பாராட்டினார். மற்றவர்கள் பற்றிய விமர்சனம் வைக்கும் போது மரியாதையாக எடுத்துச் சொன்னால், அதை கேட்பவர்களின் மனதில் உங்கள் மதிப்பு கூடும் என்று ஆரிக்கு அட்வைஸ் கொடுத்தார்.

பிறகு ஆரியை தனியாக உக்கார வைத்து மற்றவர்களிடம் ஆரியுடன் என்ன பிரச்சினை என்று கேட்டார். இந்த விஷயத்தில் எனக்கு உடன்பாடில்லை. வீட்டில் உள்ள அனைவரும் ஆரிக்கு எதிரான மனநிலையில் இருப்பதாக காட்டுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. ஆரி எதுவுமே செய்யாததை போலவும், அவர் மற்றவர்களால் பாதிக்கப்பட்டவர் போலவும் ஒரு தோற்றத்தை கமல் சாரே ஏற்படுத்தியதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. நடந்த நிகழ்வுக்கு மேலோட்டமாக கருத்து சொன்னால் சரி. ஆனால் தீர்ப்பு ஒன்ட்ரு வழங்கும் போது இரு பக்க நியாயத்தையும் பேச வேண்டியது அவசியம்.

இந்த விசாரணையில் பாலாவின் குற்றத்தை யாரும் மறுக்கவும் இல்லை. அதை நியாயப்படுத்தவும் இல்லை. ஆனால் அதே சமயத்தில் அதில் ஆரியின் பங்கு எதுவுமே இல்லை என்று சொல்வதை தான் மறுக்க வேண்டியிருக்கிறது. ஆரியின் பங்கு என்ன என்பதை தான் ரியோ, ஆரி, பாலா மூவரையும் ஒப்பீடு செய்து மேலே சொல்லியிருக்கிறேன்.

பாலா குறுக்கீடு செய்த போது அமைதியாக இருந்து விட்டு, ஆரி பேசும் போது அடக்கிய ரம்யா, பிக்பாஸ் டைட்டில் ஜெயித்தவர்களை பற்றி புறம் பேசிய பாலா, ஆரி டைட்டில் ஜெயித்தால் ஏற்றுக் கொள்ள முடியாது என்று சொல்லிய பாலா, இதையெல்லாம் கண்டித்தார். 100% சதவிகிதம் இவையெல்லாம் கண்டிக்கவேண்டியவையே. ஆனால் பாலாவை பார்த்து சோம்பேறி என்று சொன்ன ஆரியை பற்றி, ஏன் அப்படி சொன்னார் என்பது பற்றியோ ஒரு வார்த்தை கூட கேட்காமல் கடந்து போனது ஏனோ....

இதற்கு முன் ஆரியும், பாலாவும் இதே போல் ஒரு முறை சண்டை போட்டிருக்கிறார்கள். பாலாவின் கேவலமான உடல் மொழியால் எரிச்சலான ஆரி, "ஆம்பிளையா இருந்தா செய்டா" என்று சொன்ன போது ஆரியை யாரும் குறை சொல்லவில்லை. ஆரியினிடத்தில் யார் இருந்தாலும் அப்படி தான் நடந்து கொண்டிருப்பார்கள் என்று கமல் சாரே சொன்னார். அன்று பாலா செயததற்கு பெயர் தான் ப்ரொவோகிங். உசுப்பேற்றுதல். எதிராளிக்கு பிடிக்காத விஷயத்தை, பிடிக்காத செயலை தொடர்ந்து செய்து அவரை வெறுப்பேற்றுவது.

சென்ற வாரம் அனிதா விஷயத்திலும் சரி, நேற்று பாலா விஷயத்திலும் சரி ஆரி செய்தது ப்ரொவோகிங் தான். எதிராளியை வெறியேற்றுவது. அனிதா விஷயத்தில் தனிப்பட்ட உரையாடலை சபையில் பேசியிருக்க வேண்டாம் என்று ஆரியிடம் சொன்ன கமல் சார். அனிதாவிடம் அவர் பேசும் வரை பொறுமை காக்க சொன்னார். பேசக்கூடாது என்பது தான் அனிதாவின் நிலைப்பாடு.

நேற்றும் ஆரி "சோம்பேறி" என்ற வார்த்தை சொன்னபிறகு தான் பாலா அப்படி நடந்து கொண்டார். ஆனால் அந்த வார்த்தை சொன்னதை பற்றி ஒரு வார்த்தை கூட ஆரியிடம் கேட்காமல் கடந்து போனார் கமல் சார். இதை சொல்வதால் பாலாவின் செயலை நியாயபடுத்துவதாக அர்த்தம் கிடையாது. பாலாவின் செயல் தண்டனைக்குறியது என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் அவரை அந்த செயலை செய்யத் தூண்டிய ஆரியை கண்டிக்காமல் கடந்து போனதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

மற்றபடி பாலாவின் செயலை கடுமையாக விமர்சித்ததை வரவேற்கவே செய்கிறோம்.நேற்று நிகழ்ச்சியின் இறுதியில் கேப்பி காப்பாற்றப்பட்டார்.நிகழ்ச்சி முடிந்ததும் ஆரியிடம் மீண்டும் மன்னிப்பு கேட்டார் பாலா. அப்போதும் ரியோவை அந்த உரையாடலில் கொண்டு வர முயன்ற ஆரியை தடுத்து நிறுத்தினார் பாலா.

நாமினேஷன் நடக்கும் போது ஆரியை முழுதாக பேசவிட்டிருந்தால் ஆரி சொன்ன பாயிண்டை வைத்தே அவரை வீழ்த்தியிருக்கலாம். பாலாவால் அது முடிந்திருக்கும். ஆனால் பாலாவின் முன்கோபம், முரட்டுத்தனம், முட்டள்தனம் அனைத்தும் சேர்ந்து தான் அவரின் இந்த சரிவுக்கு காரணம். அனிதா மற்றும் பாலாவின் அதித ரியாக்சனே ஆரியின் தவறை மறைத்து விட்டது.

இன்றைக்கு யார் வெளியேறப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

You'r reading ஆண்டவர் வருகை ,பாலா -ஆரி மோதல் - நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது ?நாள் 90 Originally posted on The Subeditor Tamil

More Bigg boss News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை