சிறந்த கலைஞர்களுக்கு விருது வழங்காமல் அவமானப்படுத்துவதா? முதல்வருக்கு சினிமா தயாரிப்பாளர் சங்கம் கண்டனம்

by Nishanth, Jan 31, 2021, 11:10 AM IST

சிறந்த சினிமா கலைஞர்களுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் விருதுகளை வழங்காமல் அவமானப்படுத்தியது கடும் கண்டனத்திற்குரியது என்று மலையாள சினிமா தயாரிப்பாளர் சங்க முன்னாள் தலைவர் சுரேஷ் குமார் கூறியுள்ளார். கடந்த 2019ம் ஆண்டுக்கான சிறந்த மலையாள சினிமா கலைஞர்களுக்கான கேரள அரசின் விருதுகள் வழங்கும் விழா கடந்த இரு தினங்களுக்கு முன்பு திருவனந்தபுரத்தில் நடந்தது. அந்த ஆண்டின் சிறந்த நடிகராக ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் படத்தில் நடித்த ஸ்வராஜ் வெஞ்சாரமூடு, சிறந்த நடிகையாக பிரியாணி என்ற படத்தில் நடித்த கனி குஸ்ருதி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் உட்பட சிறந்த கலைஞர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவரும் விருது வாங்குவதற்காக நிகழ்ச்சிக்கு வந்திருந்தனர்.

வழக்கமாக சிறந்த கலைஞர்களுக்கான விருதுகளை முதல்வர் தான் நேரடியாக வழங்குவார். ஆனால் தற்போது கேரளாவில் கொரோனா பரவல் அதிகமாக இருப்பதால் கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளின் படியே விழா நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் தேர்ந்தெடுக்கப்பட்ட பார்வையாளர் மட்டுமே விழாவில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். கலைஞர்களுக்கு முதல்வர் பினராயி விஜயன் விருதுகளை வழங்குவார் என கருதப்பட்டது. ஆனால் தன்னால் விருதுகளை வழங்க முடியாது என்றும், மேடையில் உள்ள டேபிளில் வைக்கப்படும் விருதுகளை அந்தந்த கலைஞர்கள் அவர்களுக்குரிய விருதுகளை டேபிளில் இருந்து எடுத்துச் செல்லலாம் என்றும் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து பெயர் அறிவிக்கப்பட்டவுடன் சிறந்த நடிகர், நடிகை உள்பட கலைஞர்கள் அனைவரும் டேபிளில் இருந்த விருதுகளை எடுத்துச் சென்றனர்.

இது விருது பெற வந்த கலைஞர்களுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கடும் கண்டனம் எழுந்துள்ளது. இதுகுறித்து மலையாள சினிமா தயாரிப்பாளர்கள் சங்க முன்னாள் தலைவரும், நடிகை கீர்த்தி சுரேஷின் தந்தையுமான சுரேஷ்குமார் கூறியது: முதல்வரின் கைகளால் விருதுகளை வாங்க வேண்டும் என்ற ஆவலில் தான் கலைஞர்கள் அனைவரும் நிகழ்ச்சிக்கு வந்திருந்தனர். ஆனால் முதல்வர் பினராயி விஜயன் விருதுகளை நேரடியாக கொடுக்காமல் கலைஞர்களை அவமானப்படுத்தி விட்டார். மன்னர் காலத்தில் கூட இப்படி நடந்தது கிடையாது. கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகள் படி கையுறை அணிந்து அவர் விருதுகளை வழங்கி இருக்கலாம். அல்லது மேடையில் இருந்த மற்ற அமைச்சர்களை வைத்தாவது விருதுகளைக் கொடுத்திருக்கலாம்.

இப்படி கொடுப்பதை விட கலைஞர்களுக்கு விருதுகளை அவர்களது வீடுகளுக்கு அனுப்பி வைத்திருக்கலாம். கடந்த 3 வருடங்களுக்கு முன் டெல்லியில் தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் போது ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், அனைவருக்கும் விருதுகளை நேரடியாக கொடுக்கவில்லை என்று கூறி கேரளாவில் உள்ள சில கலைஞர்கள் விருதுகளை புறக்கணித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், தாதா சாகிப் பால்கே விருது உள்பட பல விருதுகளை அவர் நேரில் வழங்கினார். ஆனால் அந்த விருதுக்கு இணையான கேரளாவில் வழங்கப்படும் ஜே.சி.டேனியல் விருதைக் கூட முதல்வர் நேரடியாக வழங்கவில்லை என்பது மிகுந்த வேதனைக்குரியது. இதே நிகழ்ச்சியில் தபால்தலை மற்றும் சில நூல்களை முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அவர் கூறினார்.

You'r reading சிறந்த கலைஞர்களுக்கு விருது வழங்காமல் அவமானப்படுத்துவதா? முதல்வருக்கு சினிமா தயாரிப்பாளர் சங்கம் கண்டனம் Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை