பாரதிராஜாவின் ஆஸ்தான கேமராமேன் பிஎஸ் நிவாஸ் திடீர் மரணம்

by Nishanth, Feb 1, 2021, 18:46 PM IST

16 வயதினிலே கிழக்கே போகும் ரயில் உட்பட பாரதிராஜாவின் ஏராளமான படங்களில் கேமராமேனாக பணிபுரிந்து வந்த பி.எஸ். நிவாஸ் உடல்நலக்குறைவால் கோழிக்கோட்டில் மரணமடைந்தார். கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்தவர் பி. ஸ்ரீனிவாஸ் என்ற பி.எஸ். நிவாஸ். கோழிக்கோட்டில் உள்ள தேவகிரி கல்லூரியில் இளங்கலை பயின்ற இவர், பின்னர் சென்னை அடையாறில் உள்ள பிலிம் இன்ஸ்டியூட்டில் சேர்ந்து பிலிம் டெக்னாலஜியில் பட்டம் பெற்றார். பின்னர் இவர் மலையாளத்தில் சத்தியத்தின்டெ நிழலில் என்ற படத்தில் முதன்முதலாக கேமராமேன் ஆனார். இதன் பின்னர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்பட மொழிகளில் ஏராளமான படங்களில் இவர் கேமராமேனாக பணிபுரிந்தார். இவர் பாரதிராஜாவின் ஆஸ்தான கேமராமேனாக இருந்து வந்தார்.

16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், நிறம் மாறாத பூக்கள், இளமை ஊஞ்சலாடுகிறது, தனிக்காட்டு ராஜா, கொக்கரக்கோ, சலங்கை ஒலி மை டியர் லிசா உள்பட ஏராளமான தமிழ் படங்களில் இவர் கேமராமேனாக இருந்தார். இவர் பாரதிராஜாவின் ஆஸ்தான கேமராமேன் மட்டுமில்லாமல் பாரதிராஜா முதன் முதலாக நாயகனாக நடித்த கல்லுக்குள் ஈரம் மற்றும் நிழல் தேடும் நெஞ்சங்கள், செவ்வந்தி ஆகிய படங்களை இயக்கவும் செய்தார். இது தவிர ராஜா ராஜாதான், செவ்வந்தி ஆகிய படங்கள் இவரது தயாரிப்பில் வெளிவந்த படங்களாகும். இவர் மலையாளத்தில் மதுரம் திருமதுரம், மோகினியாட்டம், சிந்தூரம், சங்குபுஷ்பம் உள்பட ஏராளமான படங்களிலும், தெலுங்கில் சாகர சங்கமம், சங்கீர்த்தனா, நானி உள்பட ஏராளமான படங்களிலும், இந்தியில் சோல்வா சாவன், ரெட் ரோஸ் உட்பட பல படங்களிலும் கேமராமேனாக பணிபுரிந்துள்ளார்.

மலையாளத்தில் 1977ல் வெளியான மோகினியாட்டம் என்ற படத்திற்காக இவருக்கு சிறந்த கேமராமேனுக்கான தேசிய விருது கிடைத்தது. நீண்டகாலம் சென்னையில் வசித்து வந்த பி.எஸ். நிவாஸ் கடந்த சில வருடங்களுக்கு முன் சொந்த ஊரான கோழிக்கோடு திரும்பினார். அங்கு மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த மாதம் நிவாசுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் கோழிக்கோட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அவர் மரணமடைந்தார். அவரது மறைவிற்கு மலையாள சினிமா உலகைச் சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

You'r reading பாரதிராஜாவின் ஆஸ்தான கேமராமேன் பிஎஸ் நிவாஸ் திடீர் மரணம் Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை