அரசு தலைமையில் நடத்தப்பட்ட முத்தரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் தயாரிப்பாளர்களின் வேலை நிறுத்தம் போராட்டம் வாபஸ் பெறுவதாக கூறப்பட்டுள்ளது.
தமிழ்த் திரையுலகில் என்றும் நடந்திராத தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் டிஜிட்டல் கட்டணக் கொள்ளை மற்றும் திரைபரங்க உரிமையாளர்களுக்கு எதிரான போராட்டத்தை கடந்த மார்ச் 1ம் தேதி முதல் தொடங்கியது. இதைதொடர்ந்து, கடந்த மார்ச் 16ம் தேதி முதல் தமிழகத்தில் நடைபெற்று வந்த படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. பின்னர், மார்ச் 23ம் தேதி முதல் வெளிநாடுகளில் நடைபெற்ற படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டது.
இந்த தொடர் வேலை நிறுத்தம் போராட்டத்தால் திரைத்துறையில் பணிபுரியும் கலைஞர்கள் பலர் வேலை இழந்து தவித்து வந்தனர். திரைக்கு வர தயாராக இருக்கும் படங்களும் போராட்டத்தால் திரையிட முடியாமல் படக்குழுவினர் தவித்தனர். இந்த பிரச்னையை தமிழக அரசு தான் தீர்க்க வேண்டும் என்று நடிகர் சங்கம் கேட்டுக் கொண்டதை ஏற்று நேற்று சென்னை தலைமை செயலகத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இதில், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, வணிகவரித்துறை கே.சி.வீரமணி, தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், விநியோகஸ்தர்கள் சங்கம், டிஜிட்டர் சேவை, ஒளிபரப்பு நிறுவனங்கள் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டு பேச்சு வார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
பேச்சுவார்த்தைக் பிறகு, நடிகர் விஷால் பேசியதாவது: திரையரங்குகளில் இனி டிக்கெட் விற்பனை கணினி மூலமாக நடைபெறும். ஆன்லைனில் டிக்கெட் புக் செய்யும்போது கூடுதலாக வசூலிக்கப்படும் கட்டணம் இனிமேல் வசூலிக்கப்படாது. வேலை நிறுத்தம் குறித்து நாளை (இன்று) முடிவெடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.