நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாக கூறி 39 லட்சம் பணம் வாங்கி மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் பிரபல பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோன், அவரது கணவர் உள்பட 3 பேரை கைது செய்ய கேரள உயர்நீதிமன்றம் இன்று தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. ஆனால் அவர்களிடம் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்த தடை இல்லை என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள பெரும்பாவூரை சேர்ந்த ஷியாஸ் என்பவர் கேரள டிஜிபியிடம் சமீபத்தில் பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோன், அவரது கணவர் டேனியல் ஹெப்பர் மற்றும் சன்னி லியோன் நிறுவனத்தின் ஊழியர் சுனில் ரஜனி ஆகியோருக்கு எதிராக ஒரு புகார் கொடுத்தார்.
அதில், கொச்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதாக கூறி நடிகை சன்னி லியோன் ₹ 39 லட்சம் பணம் வாங்கி நிகழ்ச்சிக்கு வராமல் மோசடி செய்துவிட்டார் என்றும், எனவே அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார். இதுகுறித்து கொச்சி குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் கேரளா வந்திருந்த நடிகை சன்னி லியோனிடம் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, தான் பணம் வாங்கி மோசடி செய்யவில்லை என்றும், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் குறிப்பிட்ட நேரத்தில் நிகழ்ச்சியை நடத்தாதால் தான் அதில் கலந்து கொள்ள முடியாததற்கு காரணம் என்றும் அவர் கூறினார். இந்நிலையில் நடிகை சன்னி லியோன் நேற்று திடீரென கேரள உயர்நீதிமன்றத்தில் அவர் உள்பட 3 பேருக்கு முன்ஜாமீன் கோரி ஒரு மனு தாக்கல் செய்தார்.
அதில், தான் பணம் வாங்கி ஏமாற்றவில்லை என்றும், பேசியபடி முழுப் பணத்தையும் தராமல் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கட்டாயப்படுத்தியதால் தான் நிகழ்ச்சியை புறக்கணித்ததாக குறிப்பிட்டிருந்தார். இது ஒரு சிவில் புகார் மட்டுமே ஆகும். நம்பிக்கை துரோகம் மற்றும் கிரிமினல் குற்றம் சுமத்த முடியாது. புகார்தாரரின் அரசியல் பலத்தால் போலீஸ் எங்களை கைது செய்யக் கூடும் என்று அஞ்சுகிறோம். எனவே தங்களுக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த மனு இன்று நீதிபதி அசோக் தலைமையிலான டிவிஷன் பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், நடிகை சன்னி லியோன் அவரது கணவர் உள்பட 3 பேரையும் கைது செய்ய போலீசாருக்கு தடை விதித்து உத்தரவிட்டது. ஆனால் 3 பேரிடமும் விசாரணை நடத்த எந்த தடையும் இல்லை என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.