ரஜினியை வைத்து பாரதிராஜா இயக்கிய படத்திற்கு கொடி பறக்குது என பெயர் வைத்தார். ஏன் பரதேசி என பெயர் வைத்திருக்கலாமே? என்று நடிகர் ஆனந்த்ராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த 10ம் தேதி சென்னையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் இருப்பதை கண்டித்தும், ஐபிஎல் போட்டி போராட்டம் திசை திருப்பக்கூடும் என கருதியும் சென்னை அண்ணா சாலையில் அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் போராட்டம் நடைபெற்றது.
போலீசார் தடுப்பு வேலி அமைத்து போராட்டக்காரர்களை மைதானம் நோக்கி செல்ல விடாமல் தடுத்தனர். போராட்டத்தின் போது காவலர்கள் மீதும் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சிலர் தாக்குதல் நடத்தியதாக கூறப்பட்டது.
இதுகுறித்து ரஜினிகாந்த் தனது ட்விட்டரில், “வன்முறையின் உச்சகட்டமே சீருடையில் பணிபுரியும் காவலர்கள் தாக்கப்படுவது தான். இத்தகைய வன்முறை கலாச்சாரத்தை உடனே கிள்ளி எறியவில்லை என்றால் நாட்டுக்கே பேராபத்து. சீருடையில் இருக்கும் காவலர்கள் மீது கை வைப்பவர்களை தண்டிக்க இன்னும் கடுமையான சட்டங்களை நாம் இயற்றவேண்டும்” என்று பதிவிட்டு இருந்தார்.
ரஜினியின் இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இயக்குநர் பாரதிராஜா கடுமையான அறிக்கை வெளியிட்டார். அதில், “நம் முதுகில் ஏறி உட்கார்ந்து கொண்டு, நம்மீது கத்தி வைத்துப் பதம் பார்க்க நினைக்கும், ரஜினி அவர்களின் சமீபத்திய ட்விட்டர் பேச்சு!.
நீங்கள் தமிழன் அல்லாத கர்நாடகக்காவியின் தூதுவர் என்று! உங்கள் வேஷம் மெல்ல மெல்ல கலைகிறது. நீங்கள் எங்களுக்குள் சிண்டு முடிய வேண்டாம்..” என்று விமர்சித்து இருந்தார்.
இந்நிலையில், இன்று வியாழன் [19-04-18] காலை சென்னை போயஸ் தோட்ட இல்லத்தில் ரஜினியை நடிகர் ஆனந்தராஜ் சந்தித்தார். அவருடன் சுமார் அரைமணி நேரம் ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்கு பின்னர் வெளியில் வந்த அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்பொழுது பேசிய அவர், ”தமிழகம் மீதும், தமிழ் மக்கள் மீதும் மிகுந்த அன்பு கொண்டவராக ரஜினி உள்ளார். தமிழகத்தில் இருந்து ரஜினியை பிரித்து பார்ப்பது தவறானது. ரஜினிகாந்த்தை சிலர் குறி வைக்கிறார்கள். அது ஏன் என்று தெரியவில்லை. எதை நோக்கி ரஜினியை குறி வைக்கிறார்கள் என்பது சில நாட்களில் உங்களுக்கே தெரிய வரும்.
ரஜினிகாந்த் போட்ட ஒரு ட்வீட் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. யூனிபார்ம் போட்ட காவல்துறை அதிகாரியை அடித்தவர்களை கண்டித்தார் ரஜினி. உடனே திரைப்படங்களில் ரஜினி நடித்த காட்சிகளைப் போட்டும், காவல்துறையினரை அவர் அடித்த படங்களை போட்டு சமூக வலைத்தளங்களில் மீம்ஸ் போட்டனர்.
இயக்குநர் பாரதிராஜா, அமீர், சீமான் உள்ளிட்ட பலரும் ரஜினிக்கு எதிராக குரல் கொடுத்தனர். சினிமாவில் நிறைய போலீஸ்காரர்களை அடிக்கிறார் என்று பேசுகிறார்கள். சினிமா வேறு ரியல் வேறு. பழைய கதைகளை மீண்டும் மீண்டும் பேசுகிறார்கள். அன்றைக்கு நிறைய தலைவர்கள் இருந்தார்கள். அப்போது ரஜினி கேட்க வேண்டிய அவசியம் இல்லை.
எத்தனை தேர்தலுக்கு அவர் குரல் கொடுத்திருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரியும். அரசியலில் இருந்து ரஜினியை பிரித்து பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. மாற்றம் வேண்டும் என்று எதிர்பார்ப்பவர்கள் இருக்கிறார்கள். அவர் கட்சி தொடங்க வேண்டும் அதன் பின்னர் இணைந்து செயல்படுவது பற்றி கூறுகிறேன்.
ரஜினியை வைத்து பாரதிராஜா இயக்கிய படத்திற்கு கொடி பறக்குது என பெயர் வைத்தார். ஏன் பரதேசி என பெயர் வைத்திருக்கலாமே? பரதேசி என்றால் வேறு தேசத்தை சேர்ந்தவர் என்று பொருள். முன்பு தலைவர்கள் இருந்ததால் ரஜினி கருத்து கூறாமல் இருந்து வந்தார். வீட்டில் பெரிய அண்ணன் இருந்தால் எப்படி சிறியவர்கள் அமைதியாக இருப்பார்களோ அப்படித்தான் ரஜினியும் இருந்தார்” என்று தெரிவித்துள்ளார்.