சினிமா தொடர் - `கண்டதும்… கேட்டதும்… பகுதி 1

by Rahini A, Apr 20, 2018, 18:43 PM IST

"அது ஒரு நல்ல திரைப்படம் என்றால், சத்தம் மறைந்தபிறகும் பார்வையாளர்களுக்கு என்ன நடந்த கொண்டிருக்கிறது என்பதற்கான தெளிவான புரிதல் இருக்க வேண்டும்"- ஆல்ஃப்ரெட் ஹிட்ச்காக்

சினிமா

மூன்றெழுத்து மந்திரம். உலகில், சினிமாவால் வசீகரிக்கப்படாத ஆட்கள் மிகக் குறைவு. உலகச் சூழலை விடுங்கள், தமிழ்ச் சமூகச் சூழலை எடுத்துக் கொள்ளுங்கள். கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு நாட்டை ஆள்பவர்கள் எந்த துறையிலிருந்து வந்திருக்கிறார்கள் என்பதைப் பார்த்தால் புரிந்துவிடும், சினிமா நம் வாழ்க்கையின் மீது ஏற்படுத்தி இருக்கும் நேரடித் தாக்கத்தைப் பற்றி.

எப்படி ஒரே நூற்றாண்டில் சினிமாவுக்கு இவ்வளவு பெரிய அரியணை கிடைத்தது. அதற்கு பதில் மிகச் சுலபம். நம்மில் பெரும்பான்மையானவர்களுக்கு ‘சினிமா ஆசை’ இல்லாமல் இருக்காது. ஏதோ ஒரு வகையில் சினிமாவில் சம்பந்தப்பட்டுவிட மாட்டோமா என்று நம்மில் ஏங்குபவர்கள் பலர்.

இதுவே சினிமா மீது நம்மை தீராக் காதலில் வைத்திருக்கிறது. 21-ம் நூற்றாண்டில், உலகமே ஒரு சிறிய கிராமம் போல் ஆகிவிட்ட நிலையில், நம் ஊர் சினிமாவைத் தாண்டி பன்னாட்டு சினிமாக்கள் நமக்கு ஏதோ ஒரு வகையில் அறிமுகமாகி விடுகிறது. அது நம் ரசனையில் ஒரு புதுவிதப் பாய்ச்சலைப் புகுத்தி விடுகிறது. அதனால், நாம் தொடர்ந்து உலக சினிமாக்களைத் தேடி பயணப்பட்டபடியே இருக்கிறோம்.

கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்கு முன்பு ஒளிப்பதிவாளர் செழியன் ‘உலக சினிமா’ என்ற தலைப்பிட்ட கட்டுரைத் தொடரை வாராவாரம் ஆனந்த விகடனில் எழுதினார். உலக சினிமாக்கள் பற்றி பரவலாக பேசத் தொடங்கிய காலக்கட்டத்தில் எடுக்கப்பட்ட ஆக்கப்பூர்வமான முயற்சி அது.

அந்த கட்டுரைத் தொடர் புத்தகமாக பிரசுரிக்கப்பட்டப் பிறகு, அதையும் வாங்கி மறுபடியும் படித்தவர்கள் அதிகம்.  மூன்று தொகுப்புகளாக வந்தது செழியன் எழுதிய ‘உலக சினிமா’.

‘இதுபோன்ற படங்களை தமிழில் நாம் ஏன் எடுக்கவில்லை?’ என்று தொடர்ந்து கேட்கிறார்கள். நிச்சயமாக எடுக்க முடியும். அடுத்த பத்து வருடங்களில் எங்கோ ஒரு தேசத்திலிருந்து ஒருவர் உலக சினிமாவைப் பற்றி எழுதுகையில், அதில் பத்து தமிழ்ப் படங்களாவது இடம்பெற வேண்டும். அதற்கான தீவிரமான தேடலுடன் களம் இறங்கினால், நம்மால் எடுக்க முடியும்’ என்று இந்த வரிகளை ‘உலக சினிமா’ வரிசையின் முதல் புத்தகத்தின் முன்னுரையில் எழுதியிருப்பார் செழியன்.

இதோ, பத்து ஆண்டுகள் கடந்துவிட்டன. இந்தப் பத்து ஆண்டுகளில் தமிழ் சினிமாவில் தொழில்நுட்ப ரீதியிலும், கதை சொல்லல் ரீதியிலும் பல மாற்றங்கள் வந்துவிட்டன. இருப்பினும், பத்து ஆண்டுகளுக்கு முன்பு உலக சினிமாக்களை ஆச்சரியத்துடன் வாய் பிளந்து பார்க்க ஆரம்பித்த தமிழ்ச் சமூகம், இன்னும்  வாயை பிளந்தபடியேதான் இருக்கிறது. அங்கும் இங்கும் சில தரமான படங்கள் வந்தபோதும், இங்கு ஒரு பெரும் அலை உருவாகவில்லை என்பது ஏமாற்றமே.

ஆனால், தொழில்நுட்பம் எளிய மனிதர்கள் கைக்கு வந்து கொண்டிருக்கும் காலகட்டம் இது. சொல்லப்படாதவர்கள் கதைகளும், கேட்க மறுக்கப்பட்டவர்கள் கதைகளும் சொல்லத் துடித்துக் கொண்டிருக்கின்றன. நாளுக்கு நாள் எது சினிமா, அதிலும், எது நல்ல சினிமா? என்பதற்கான பார்வை மாறிக் கொண்டே இருக்கிறது. சினிமா தொடர்ச்சியாக தன்னை வெவ்வேறு தளங்களில் தகவமைத்துக் கொண்டே இருக்கிறது.

முதன்முதலில் தன்னை வெரும் காட்சி ஊடகமாக வெளிப்படுத்திக் கொண்ட சினிமா, சீக்கிரமே தன்னை செவிவழி ஊடகம்-காட்சி ஊடகம் என மல்டி-விஷுவல் மீடியமாக (Multivisual medium) மாற்றிக் கொண்டது. இன்றும் நாம் பார்க்கும் சினிமாவிற்கான விதை கிட்டத்தட்ட 100 ஆண்டுகளுக்கு முன்பே போடப்பட்டுவிட்டது. அதுவும், அன்றிலிருந்து இன்றுவரை ‘நல்ல சினிமா’ என்று கூறப்படும் திரைப்படங்களுக்குள் ஒருவித ‘திரைமொழி’ ஒற்றுமை இருப்பதைப் பார்க்கலாம். அதாவது தேர்ந்தெடுக்கப்பட்ட கதைக்களம் எதுவாயினும், சினிமாவின் சில அடிப்படைக் கூறுகளை பின்பற்றுவதைத்தான் திரைமொழி என்கிறோம். அப்படி திரைமொழியுடன் எடுக்கப்பட்ட படங்கள்தான் அன்றிலிந்து இன்றுவரை ‘உலக சினிமா’-வாக காலம் கடந்தும் நிலைத்திருக்கிறது.

தற்போதைய இணைய யுகத்தில், பெரும்பான்மையான மேற்குலக சினிமா என்பது ஒரு சொடக்கில் அணுகக் கூடியதாக இருக்கிறது. மூன்றாம் உலக நாடுகளிலிருந்து வரும் ‘மூன்றாம் உலக சினிமாக்கள்’ கிடைப்பது சற்று சிரமம்தான் (இதில் கொரிய மற்றும் ஈரான் படங்கள் விதிவிலக்கு). ஆயினும், தொடர்ச்சியாக நாடு முழுவதும் நடக்கும் சர்வதேச திரைப்பட விழாக்கள் மூலம் லத்தீன் அமெரிக்க நாடுகளின் படங்கள், ஆஃப்கானிஸ்தான் நாட்டுப் படங்கள், துருக்கி நாட்டுப் படங்கள் என பலதரப்பட்ட பின்புலங்களிலிருந்தும், கலாச்சாரங்களிலிருந்தும் படங்களை சாதாரண சினிமா ரசிகன் பார்க்கும் வாய்ப்பு இருக்கிறது. இதைப் பார்த்துவிட்டு பலர் உலக சினிமாக்களைப் பற்றி தொடர்ச்சியாக எழுதுகிறார்கள். உரையாடுகிறார்கள். மேற்குலகத்தின் கலையான சினிமா இவ்வளவு பரவலான பின்பும் அதன் திரைமொழி, இன்றுவரை போற்றப்படுகிற அனைத்து சினிமாக்களிலும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

இப்படி உலகளாவிய சினிமா ரசிகர்களால் பரவலாக வரித்துக் கொள்ளப்பட்ட படங்களைப் பற்றி எழுத முயல்வதே இந்தத் தொடர்.

அதேபோல, இந்தத் தொடரில் முதல் சில வாரங்களுக்கு எடுத்துக் கொள்ளப்போகும் சினிமாக்கள், ஓரளவு உலக சினிமா பார்க்கும் பழக்கம் இருப்பவர்களுக்கே பரிட்சயம் ஆன திரைப்படங்களாகவே இருக்கும். பலர் அந்தத் திரைப்படத்தைப் பற்றி எழுதி இருக்கிறார்கள். நீங்களே கூட அந்தப் படத்தைப்  பார்த்துவிட்டு, அதைப் பற்றி நண்பர்களுடன் உரையாடியிருக்கக் கூடும். இருந்தும், மீண்டும் ஒரு முறை அந்த திரைப்படங்களைப் பற்றி எழுதுவதற்கான காரணம், அது உலக சினிமா ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்ததால்தான். எப்படி நல்ல சினிமாக்களை எத்தனை முறைப் பார்த்தாலும் சலிப்புத்தட்டுவது இல்லையோ, அதே போல நல்ல சினிமாக்களைப் பற்றி படிப்பதும், அந்த  சினிமாவைப் பற்றி ஏதோ ஒரு புதிய விஷயத்தைத் தெரிந்து கொள்வதும் சலிப்புத்தட்டாத ஒன்றுதான்

(தொடர்ந்து பயணிப்போம்)

-பரத்ராஜ்

You'r reading சினிமா தொடர் - `கண்டதும்… கேட்டதும்… பகுதி 1 Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை