"எனது திரைப்படங்கள் வெற்றி பெறுவது பற்றியோ, தோல்வியைத் தழுவது குறித்தோ நான் எப்போதும் கவலைப்படுவது இல்லை" என்று நடிகர் ஃபஹத் ஃபாசில் தெரிவித்துள்ளார்.
மலையாள சினிமாவில் முக்கியமான நடிகராக வலம் வருபவர் ஃபஹத் ஃபாசில். அங்கு தனக்கென தனி முத்திரை பதித்திருப்பவர். அண்மையில், ஷியாம் புஷ்கரன், திலீஷ் போதன் கூட்டணியில் 'ஜோஜி' என்ற திரைப்படம் அமேசான் பிரைமில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில், ஜோஜி படம் குறித்து ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில், "சில மாதங்களுக்கு முன்பு எனக்கு நேர்ந்த விபத்து காரணமாக ஓய்வு எடுக்க நேர்ந்தது. இந்த நேரத்தில் ஜோஜி படத்தின் வெற்றி மகிழ்ச்சியை தருகிறது. ஆனால் பொதுவாக எப்போதும் எனது திரைப்படங்கள் வெற்றி பெறுவது பற்றியோ அல்லது தோல்வியைத் தழுவுவது குறித்தோ நான் கவலைப்படுவது இல்லை.
ஏனென்றால், படங்கள் தோல்வி அடைந்தால் வேதனையை தரும். உங்கள் படம் வெற்றி பெற்றிருந்தால்கூட, நீங்கள் அதில் செய்யவேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன; நீங்கள் தவறவிட்ட பல விஷயங்கள் உள்ளன. அதனால்தான் வெற்றி - தோல்வி பற்றி கவலைகொள்வது கிடையாது. நீங்கள் ஆரம்பத்தில் ஒப்புக்கொண்ட விஷயத்திற்கு, கருத்துக்கு நியாயம் செய்திருக்கிறீர்களா என்பதுதான் உங்களது கவனமாக இருக்க வேண்டும். அது கடைசி வரைக்கும் தொடர வேண்டும்.
எனது வேலையின் அம்சத்தை நான் விரும்புகிறேன்; என்னால் முடிந்தவரை இதைச் செய்ய விரும்புகிறேன். நான் எப்போதும் வேலையை எவ்வாறு சிறப்பாகச் செய்வது என்பது பற்றி சிந்திப்பேன்" என்று கூறியிருக்கிறார்.
சமீபத்தில் ஃபஹத் ஃபாசில் நடித்த 'ஜோஜி', 'இருள்' என இரண்டு படங்கள் வெளியாகின. இரண்டு படங்களுமே ஓடிடியில்தான் ரிலீசாகின என்பது குறிப்பிடத்தக்கது.