கொரோனாதொற்று - ரெட்டைச்சுழி, ஆண்தேவதை பட இயக்குநர் தாமிரா காலமானார்!

by Madhavan, Apr 27, 2021, 11:23 AM IST

கொரோனா பாதிப்பின் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இயக்குநர் தாமிரா காலமானார். அவருக்கு வயது 52.

தமிழகத்தில் கொரொனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்றைய தினம் தமிழகத்தில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை 15 ஆயிரத்தைக் கடந்தது. இதற்கிடையில் அரசியல் தலைவர்கள், திரைத்துறையைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த தொற்று பாதிப்பு இயக்குநர் தாமிராவையும் விடவில்லை.

திருநெல்வேலியை சேர்ந்தவர் தாமிரா என்ற காதர் முகைதீன். மறைந்த இயக்குநர் கே பாலச்சந்தரிடம் இணை இயக்குநராகப் பணியாற்றியவர் தாமிரா. 2010ஆம் ஆண்டு இயக்குநர் ஷங்கர் தயாரிப்பில் 'ரெட்டைச் சுழி' என்கிற திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.முதல் படத்திலேயே பாரதிராஜா, பாலச்சந்தர் என்ற தமிழ் சினிமாவின் இரண்டு உச்ச இயக்குநர்களை சேர்த்து நடிக்க வைத்து கவனம் ஈர்த்தார்.

ஆனால் 'ரெட்டைச் சுழி' எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. இதன் பின் பல ஆண்டுகள் கழித்து சமுத்திரகனி, ரம்யா பாண்டியன் ஆகியோர் நடிப்பில் 'ஆண் தேவதை' என்கிற திரைப்படத்தை தாமிரா இயக்கியிருந்தார்.

இந்தப் படமும் ஓரளவு வெற்றி பெற்றது. தொடர்ந்து பல்வேறு தொலைக்காட்சி தொடர்களை இயக்கி வந்த தாமிராவுக்கு அண்மையில் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்ப்பட்டது. இதையடுத்து அவர், சென்னையில் இருக்கும் மாயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், இன்று செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 27) காலை, சிகிச்சை பலனின்றி தாமிரா உயிரிழந்தார். இந்தச் செய்தியை அவரது செய்தித் தொடர்பாளர் உறுதி செய்துள்ளார்.தாமிராவின் மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

You'r reading கொரோனாதொற்று - ரெட்டைச்சுழி, ஆண்தேவதை பட இயக்குநர் தாமிரா காலமானார்! Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை