கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் சமூக அக்கறை இருக்க வேண்டும். அதற்கு எதிராக, மெர்க்குரி படமும் ஒரு போராட்ட வடிவம்தான் என்று இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் கூறியுள்ளார்.
தான் புதிதாக இயக்கியிருக்கும் ‘மெர்க்குரி’ திரைப்படம் வெற்றிகரமாக ஓடுவது குறித்து, கோவையில் திரையரங்கு ஒன்றில் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய கார்த்திக் சுப்புராஜ், "மெர்க்குரி படத்திற்கு மக்களின் ஆதரவு கிடைத்திருக்கிறது. வசனமே இல்லாத படத்துக்கு இவ்வளவு பெரியவெற்றி கிடைக்குமென்று நாங்கள் நினைக்கவில்லை.
கார்ப்பரேட் க்ரைம்களினால் மக்கள் சந்திக்கும் பிரச்சனைகளின் தீவிரத்தைத் தீவிரமாக இந்தப்படத்தில் சொல்லியிருக்கிறோம்; ஹைட்ரோ கார்பன், மீத்தேன் போராட்டங்கள் நடந்துகொண்டிருக்கும் சூழலில், இந்தப் படம் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
சம்பந்தமே இல்லாத நபர்களோடு போராடி சண்டை போட்டுக்கொண்டிருப்பதைவிட, நம்முடைய உண்மையான எதிரியார்? என்பதைக் கண்டுபிடித்து, அவர்களை எதிர்த்துப் போராட வேண்டும் என்பதைத்தான் இந்தப் படம் மூலமாக கூறியிருக்கிறேன்.
உலகத்தையே கார்ப்பரேட் நிறுவனங்கள்தான் ஆக்கிரமித்து இருக்கின்றன. அதிலிருந்து தப்பிப்பதற்கு வழி தெரியவில்லை. தப்பிக்கவும் முடியாது. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் சமூக அக்கறை இருக்க வேண்டும். அதற்கு எதிராக, மெர்க்குரி படமும் ஒரு போராட்ட வடிவம்தான்” என்று கூறியுள்ளார்.