பாகுபலி மீதான காதலைக் கொண்டாடி வருகிறார்கள் சீன ரசிகர்கள்.
சில வாரங்களுக்கு முன்னர் உலகம் முழுவதும் வெளியான `அவெஞ்சர்ஸ்: இன்ஃபினிட்டி வார்’ திரைப்படம் வசூலில் புதிய சாதனை புரிந்து வருகிறது. இந்தப் படம் சீனாவிலும் சமீபத்தில் வெளியானது.
ஆனால், உலக அளவில் வசூல் சாதனையை அள்ளிய அவெஞ்சர்ஸ் திரைப்படம் சீனாவில் அத்தனைப் பிரபலமாகவில்லை. காரணம், ஓர் இந்தியத் திரைப்படம். அவெஞ்சர்ஸ் வெளியான அதே நாளில்தான் சீனாவில் பாகுபலி-2 ரிலீஸானது.
இதனால் வசூல் வேட்டையில் மட்டுமல்லாமல் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்ததிலும் பாகுபலி 2 திரைப்படம் வெற்றியை எட்டியுள்ளது. பாகுபலியாக நடித்த நடிகர் பிரபாஸ் மேல் காதல் கொண்டு சீனப் பெண்கள் பலர் திருமண ஆசையை வெளிப்படுத்தியது எல்லாம் பழைய கதை.
ஆனால், தற்போது பாகுபலியின் இரண்டாம் பாகத்துக்குப் பின்னர் கட்டப்பா மேல் பிரியம் அதிகரித்துள்ளது. கட்டப்பாவாக நடித்த நடிகர் சத்யராஜ்-க்கு சிலைகள், அவரது உருவ பொம்மைகள், அவர் படத்தில் பயன்படுத்திய பொருள்களின் மாதிரிகள் எனப் பலவும் சந்தையில் பயங்கரமாகக் கல்லாபெட்டியை நிரப்பிவருகிறதாம்!