நடன இயக்குனராக தனது சினிமா பயணத்தை துவங்கி, நடிகராகி பின் இயக்குனர் அவதாரம் எடுத்து பல வெற்றி படங்களை கொடுத்தவர் பிரபு தேவா. இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என பெயர் பெற்றவர்.
1990-களில் இவர் நடித்து வெளி வந்த படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட். தளபதி விஜய் நடிப்பில் இவர் கொடுத்த போக்கிரி திரைப்படம் மெகா ஹிட். இப்படி, தான் பயணிக்கும் எல்லா துறைகளிலும் ஹிட் கொடுத்து வந்த பிரபு தேவா தற்போது மீண்டும் திரைப்படத்தில் நடிக்க வந்துள்ளார். இவர் நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம் மெர்க்குரி, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
பிரபு தேவா தனது உதவியாளர் முகில் இயக்கும் பெயரிடப்படாத புதிய படம் ஒன்றில் போலீஸாக அவதாரம் எடுத்துள்ளார். படத்தை நேமிசந்த் ஜபக் தயாரிக்கிறார். நிவேதா பெத்துராஜ், இயக்குனர் மஹேந்திரன், சுரேஷ் மேனன், முகேஷ் திவாரி, என முன்னணி நடிகர்கள் படத்தில் இணைந்துள்ளனர்.
டி இமான் இசையமைக்கும் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார் கே.ஜி.வெங்கடேஷ். சண்டை காட்சிகளை அன்பரீவ் பார்த்துக்கொள்கிறார்.
பிரபு தேவாவின் திரையுலக வாழ்க்கையில் இந்த படம் ஒரு திருப்புமுனையாக இருக்கும் என்கிறார் இயக்குனர் முகில். முதற்கட்ட படப்பிடிப்பு நேற்று சென்னையில் துவங்கியது. அதில் பிரபு தேவா மற்றும் முகேஷ் திவாரி மோதி கொள்ளும் சண்டை காட்சிகள் படமாக்கபட்டது.