'காலா’ புகழ் இயக்குநர் பா.ரஞ்சித் நேற்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை நேரில் சந்தித்துப் பேசியுள்ளார்.
இது குறித்து ராகுல் காந்தி அவரது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், ‘ரஞ்சித்துடன் அரசியல் குறித்துப் பேசினேன்’ என்று பதிவிட்டுள்ளார். அட்டக்கத்தி, மெட்ராஸ், கபாலி, காலா ஆகிய தொடர் வெற்றித் திரைப்படங்களை இயக்கி குறைந்த காலத்தில் உச்சம் தொட்டவர் இயக்குநர் பா.ரஞ்சித்.
சினிமாவில் மட்டுமல்லாமல், தொடர்ந்து அரசியல் தளத்திலும் இயங்கி வருபவர் ரஞ்சித். குறிப்பாக, ஒடுக்கப்பட்டவர்களுக்காக அரசியலை வெள்ளித்திரையில் பிரதிபலிக்க தொடர்ந்து முயற்சி எடுத்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை அவரும், நடிகர் கலையரசனும் நேரில் சென்று சந்தித்துள்ளனர். இந்த சந்திப்பு குறித்து ராகுல் காந்தி, ‘காலா, கபாலி, மெட்ராஸ் போன்ற வெற்றித் திரைப்படங்களை இயக்கிய பா.ரஞ்சித் மற்றும் நடிகர் கலையரசனை டெல்லியில் நேற்று சந்தித்தேன்.
சினிமா, சமூகம் மற்றும் அரசியல் குறித்து நாங்கள் உரையாடினோம். அவர்களுடனான கலந்துரையாடலை நான் மிகவும் விரும்பினேன். தொடர்ந்து இதைப் போன்ற சந்திப்புகளை எதிர்நோக்கிக் காத்திருக்கிறேன்’ என்று ட்வீட் செய்துள்ளார். இது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.