இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகிவரும் புதிய திரைப்படம் ‘வடசென்னை’. இப்படத்தில் நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா, 'ஆடுகளம்' கிஷார், இயக்குநர் சமுத்திரகனி, டேனியல் பாலாஜி, கருணாஸ் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படம் மூன்று பாகங்களாக உருவாகவதாக தகவல்கள் சமீபத்தில் வெளிவந்தன.
இப்படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க விஜய் சேதுபதியும் ஒப்பந்தமாகியிருந்ததும் சில தவிர்க்க முடியாத காரணத்திற்க்காக விஜய் சேதுபதி இப்படத்திலிருந்து விலகியுள்ளதாகவும் ஏற்கனவே கூறப்பட்டது. இந்நிலையில், இயக்குநரும், நடிகருமான அமீர் அவர்களிடம் வடசென்னை திரைப்படத்தின் இயக்குநர் வெற்றிமாறன் கதைப்பற்றியும், அந்த கதாப்பாத்திரத்தை பற்றியும் நேரில் சந்தித்து கூறியதாகவும், கதையை கேட்டறிந்த அமீர் நடிக்க சம்மதம் தெரிவித்துவிட்டதாவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
அமீர் இதற்க்கு முன்னதாக ‘சேது’ என்ற திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிகராக அறிமுகமாகி 'யோகி' திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அவதாரமெடுத்தார் குறிப்பிடத்தக்கது. ‘வடசென்னை’ திரைப்படத்தில் அவர் நடிக்கப்போவதாக வெளிவந்துள்ள செய்தி அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது.