தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா பிரபலங்கள் மீது தொடர்ந்து பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் ஸ்ரீரெட்டிக்கு நடிக்க வாய்ப்பு அளிக்க தயார் என்று நடிகரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நடிகர், இயக்குனர் ராகவா லாரன்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
என்னைப் பொறுத்தவரை ஸ்ரீரெட்டி விவகாரம் ஒரு பெரிய விஷயம் அல்ல. அதைப் பற்றி நான் கவலைப்படுவதில்லை. ஆனால், இந்த சர்ச்சை குறித்து பலரும் என்னிடம் தொடர்பு கொண்டு கேட்டார்கள். அவர்களுக்கு பதிலளிக்க, இதுவே சரியான தருணம் என நினைக்கிறேன். நான் தெலுங்கில் போராளி குறித்த கதையை இயக்கும் சமயத்தில், ஒரு ஹோட்டலில் என்னை சந்தித்ததாக ஸ்ரீரெட்டி கூறியிருக்கிறார். அப்படி பார்த்தால் நான் அந்த படத்தை இயக்கி 7 வருடங்கள் ஆகிறது. இந்த 7 வருடங்கள் என்மீது புகார் கூறாத ஸ்ரீரெட்டி, தற்போது கூறுவது ஏன்?
நான் தங்கியிருந்த ஓட்டல் அறைக்கு அவர் வந்ததாகவும், அங்குவைத்து நான் அவரை தவறாக பயன்படுத்தியதாகவும் கூறினார். மேலும் அந்த ஓட்டல் அறையில் கடவுளின் புகைப்படம் மற்றும் ருத்ராட்ச மாலையை பார்த்ததாகவும் கூறியிருக்கிறார். ஓட்டல்களில் பூஜை செய்ய, ருத்ராட்ச மாலையை எடுத்துச் செல்ல நான் ஒன்றும் முட்டாள் இல்லை. நான் அவருக்கு எந்தவிதமான தீங்கும் செய்யவில்லை என்பது எனக்கும், கடவுளுக்கும் தெரியும் என்பதை ஸ்ரீரெட்டியிடம் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.
இதற்கு பிறகும் அவர் மீது எனக்கு கோபம் இல்லை. உங்களது அனைத்து பேட்டிகளையும் பார்த்து உங்கள் மீது பரிதாபப்படுகிறேன். உங்கள் பிரச்சனை தான் என்ன? வாய்ப்பு தருவதாக கூறி அனைவரும் உங்களை ஏமாற்றி விட்டார்கள் என்பது தானே? தான் ஒரு சிறந்த நடிகை என்று கூறிகிறீர்கள். நாம் இருவரும் செய்தியாளர்களை நேரில் சந்திப்போம். அவர்கள் முன்பு நான் உங்களுக்கு ஒரு கதாபாத்திரம் கொடுத்து நடிக்க வைக்கிறேன், மேலும் சில எளிமையான நடனமும் நீங்கள் ஆட வேண்டும். உங்களிடம் திறமை இருப்பதை அவர்கள் முன்பு நீங்கள் நிரூபித்து, இயக்குநராக உங்களது நடிப்பும், நடனமும் என்னை திருப்திபடுத்தினால் எனது அடுத்த படத்தில் உங்களுக்கு ஒரு வாய்ப்பு தருகிறேன். அதற்கான முன்பணத்தையும் உடனே வழங்குகிறேன்.
நான் எந்த தவறும் செய்யவில்லை, எனவே உங்களை நேரில் சந்திப்பதில் எனக்கு பயமில்லை. எனது படத்தில் நீங்கள் நடிக்கும் பட்சத்தில், உங்களுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைக்க வாய்ப்புள்ளது. ஒருவேளை அனைவர் முன்பும் நடித்துக் காட்ட விருப்பமில்லை எனில், எனது மேனேஜரை தொடர்வு கொண்டு, உங்களது வழக்கறிஞர்கள் மற்றும் உங்களது நலம் விரும்பிகள் முன்பு நடித்துக் காட்டுங்கள். நான் கண்டிப்பாக வாய்ப்பு வழங்குகிறேன்.
உங்களுக்கு பயந்து இந்த அறிக்கையை நான் வெளியிடவில்லை. நான் பெண்களை மதிப்பவன், அதனாலேயே எனது தாய்க்கு கோவில் கட்டியுள்ளேன். அதை அனைத்து பெண்களுக்கும் சமர்ப்பித்துள்ளேன். நல்லதையே பேசுவோம், நல்லதையே செய்வோம். உங்களுக்காக கடவுளிடம் பிரார்த்திக்கிறேன்.
இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.