நடிகர் ராதாரவி தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், நடிகர் விஷால் உயர்நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற நடிகர் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்று நாசர் தலைவராகவும், கார்த்திக் பொருளாளராகவும், விஷால் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆனார்.
இதனையடுத்து முன்னாள் நிர்வாகிகளான நடிகர் சரத்குமார், ராதாரவி உள்ளிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என புதிய நிர்வாகிகள் தெரிவித்திருந்தனர்.
இதனையடுத்து நடிகர் சங்க உறுப்பினர் பதவியில் இருந்து தன்னை நீக்குவதற்கு தடை விதிக்கக் கோரி நடிகர் ராதாரவி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
விசாரணையின் போது ஆஜரான விஷால் தரப்பினர், வழக்கு முடியும் வரை ராதாரவி மீது நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது என உத்தரவாதம் அளித்திருந்தனர். ஆனால் அதற்கு மாறாக கடந்த 22 ஆம் தேதி அவர் அதிரடியாக நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டார்.
இதைத் தொடர்ந்து ராதாரவி தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், நடிகர் விஷால் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
அப்போது நீதிமன்றத்திடம் வழங்கிய உத்தரவாதத்தை மீறும் எண்ணம் தங்களுக்கு இல்லை என்றும், பொதுக்குழுவில் பெரும்பான்மையானோர் எடுத்த முடிவின்படியே நடிகர் ராதாரவி நீக்கப்பட்டார் என்றும் தெரிவித்தார்.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் இவ்வழக்கின் அடுத்த விசாரணையை வரும் ஜனவரி 18 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார். அத்துடன் இவ்வழக்கு விசாரணைகளில் இருந்து நடிகர் விஷால் நேரில் ஆஜராவதற்கும் விலக்கு அளித்தும் உத்தரவிட்டார்.