தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜனை கண்டதும் பாஜகவுக்கு எதிராக முழக்கமிட்ட இளம்பெண் சோபியாவுக்கு பா.ரஞ்சித் ஆதரவாக குரல் கொடுத்துள்ளார்.
தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னையில் இருந்து தூத்துக்குடி செல்லும் விமானத்தில் நேற்று முன்தினம் பயணித்தார். அப்போது, தூத்துக்குடி விமான நிலையத்தில் தமிழிசையை பார்த்ததும் சோபியா என்ற இளம்பெண் திடீரென பாசிசி பாஜக ஆட்சி ஒழிக என்று கோஷமிட்டார். இதனால், தமிழிசைக்கும், அந்த பெண்ணிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. தமிழிசை மன்னிப்பு கேட்கும்படி வலியுறுத்தியும் அந்த பெண் பிடிவாதமாக மன்னிப்பு கேட்காமல் இருந்தார்.
இதனால், கோபத்தின் உச்சத்திற்கு சென்ற தமிழிசை போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து, வழக்குப்பதிவு செய்த போலீசார் சோபியாவை கைது செய்து, 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
சோபியாவுக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டதை அடுத்து, தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், சோபியாவுக்கு ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது.
மனு மீதான விசாரணையின்போது இதற்கு எதிர்ப்பு தெரிவித்து யாரும் முன்வராத நிலையில், சோபியாவுக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.
இந்நிலையில், இயக்குனர் பா.ரஞ்சித் சோபியாவுக்கு ஆதரவு அளித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “ஜனநாயகத்தின் குரல் சோபியா. தமிழக அரசே விடுதலை செய். பாசிசி பாஜக ஆட்சி ஒழிக ” என்று பதிவிட்டுள்ளார்.