சதுரங்க வேட்டை-2 படத்துக்கான சம்பள பாக்கி ரூ.1.79 கோடியை வழங்க உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் நடிகர் அரவிந்தசாமி வழக்கு தொடர்ந்துள்ளார்.
நட்ராஜ் நடிப்பில் வினோத் இயக்கத்தில் வெளியான படம் சதுரங்க வேட்டை. மனோபாலா தயாரித்த இப்படத்தை திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் வெளியிட்டது. சதுரங்க வேட்டை படம் மக்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதனை தொடர்ந்து சதுரங்க வேட்டை-2 படத்தின் பணிகள் துவங்கப்பட்டன.
மனோபாலா தயாரிப்பில் உருவான சதுரங்கவேட்டை-2 படத்தில், அரவிந்த்சாமி, த்ரிஷா, நாசர், ராதாரவி, ஸ்ரீமன், பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்த படத்துக்காக பேசிய சம்பளத்தில் தனக்கு ஒருகோடியே 79 லட்சம் ரூபாய் பாக்கி வைத்துள்ளதாகவும், அத்தொகையை ஆண்டுக்கு 18 சதவீத வட்டியுடன் வழங்க தயாரிப்பாளருக்கு உத்தரவிடக் கோரியும் நடிகர் அரவிந்த்சாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், சம்பள பாக்கியை வழங்கும் வரை படத்தை வெளியிட தடை விதிக்கவும் நடிகர் அரவிந்த்சாமி கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி எம்.சுந்தர் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான அரவிந்தசாமி தரப்பு வழக்கறிஞர், படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தவில்லை என தெரிவித்தார். இதனை அடுத்து, மனுவுக்கு வரும் 20ஆம் தேதிக்குள் பதிலளிக்க பட தயாரிப்பாளருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.