கவர்ச்சி கன்னி சில்க் ஸ்மிதா நடித்த கடைசி படத்தை வெளியிடப் போவதாக படத்தின் இயக்குநர் தெரிவித்துள்ளார்.
ஆந்திரமாநிலம் ஏலூரு என்ற இடத்தில் பிறந்தவர் விஜயலட்சுமி என்ற சில்க் ஸ்மிதா 1970களில் ஒரு ஒப்பனைக் கலைஞராக இவர் திரைத்துறை வாழ்க்கையைத் தொடங்கினார். சில்க் ஸ்மிதா தமிழ் நடிகர் வினுசக்கரவர்த்தியால் வண்டிச்சக்கரம் என்கிற திரைப்படத்தில் சிலுக்கு என்கிற சாராயக்கடையில் பணிபுரியும் பெண் கதாபாத்திரத்தில் முதன்முறையாக நடித்தார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் என தென்னிந்தியத் திரைப்பட உலகின் 'கனவுக்கன்னியாக' வலம்வந்தவர் சில்க் ஸ்மிதா . இவரின் பாடல்களோ, அல்லது காட்சிகளோ இடம் பெறாத படங்களே இல்லை எனும் அளவில் மிகவும் பிரபலமாக இருந்தவர்.
கடந்த 1996-ஆம் ஆண்டு மர்மமான முறையில் இறந்தார். அவர் இறந்து 22 ஆண்டுகளுக்கு பிறகு, சில்க் ஸ்மிதாவை அறிமுகப் படுத்திய இயக்குனரின் கடைசி படமான ‘ராக தாளங்கள்’ படத்தை வெளியிட முயற்சி நடக்கிறது.
இது குறித்து பேசிய படத்தின் இயக்குனர் திருப்பதி ராஜன் , "1979-ம் ஆண்டு சில்க் சுமிதாவை ஆந்திராவில் இருந்து அழைத்து வந்து சுமிதா என்று பெயர் சூட்டினேன். எனது படமான வீணையும் நாதமும் படத்தில் சில்க்கு அறிமுகம் ஆனார். "
"அவர் நடித்த கடைசி படம் ராகதாளங்கள். 1995-ல் இந்த படத்தில் சாதி பிரச்சினையை பற்றி பேசி இருந்ததால் சென்சாரில் பிரச்சினை ஆனது. எனவே ரிலீஸ் செய்ய முடியவில்லை. இப்போது ரிலீஸ் செய்ய முடிவு எடுத்துள்ளேன்’ எனக் கூறியுள்ளார்.