ஹரி இயக்கத்தில், விக்ரம் – த்ரிஷா நடிப்பில் 2003ஆம் ஆண்டு வெளியான சாமி படம், சியான் விக்ரமுக்கு மாபெரும் வெற்றிப் படமாக அமைந்தது. 15 ஆண்டுகளுக்கு பிறகு, ஹரி – விக்ரம் கூட்டணியில் உருவாகியுள்ள சாமி ஸ்கொயர் படம் மாஸ் மசாலா படமாக மாறியுள்ளது. முதல் பாகத்தில் இருந்த கிளாஸ் நிறையவே மிஸ்சிங்!
கதைக் களம்:
பெருமாள் பிச்சையை ஆறுச்சாமி கொன்று 26 ஆண்டுகள் ஆன நிலையில், அவனது மூன்று மகன்கள் தந்தையை கொன்றவனை பழி வாங்க துடிக்கின்றனர். தந்தை ஆறுச்சாமியும், மகன் ராம்சாமியும் இணைந்து சமூகத்தில் விஷ பூச்சிகளாக இருக்கும் அம்மூவரையும் வேரோடு வதம் செய்வதே திரைக்கதையின் சுருக்கம்.
அம்மா கதாபாத்திரம் என்பதால், த்ரிஷா ’நோ’ சொல்ல ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். பிளாஷ்பேக்கில், ”கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா” பாணியில் “மிளகாய் பொடியே” பாடல். ஆனால், அந்த பாடல் க்ரியேட் செய்த மேஜிக்கை இது தவறவிட்டு விட்டது.
கன்ட்ரோல் பண்ணுங்க கீர்த்தி சுரேஷ்:
மகன் விக்ரமுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ், சிங்கம் 2 படத்தில் அனுஷ்காவின் கதாபாத்திரத்தை அப்படியே காப்பி பேஸ்ட் செய்துள்ளார் இயக்குநர் ஹரி. கீர்த்தி சுரேஷ் அழகாக இருக்கிறாங்க.. ஆனால் ஓவர் எக்ஸ்பிரசன்ஸ் தாங்க முடியல..
சொதப்பல் சூரி:
சூரி காமெடி, சீமராஜா படத்திற்கு கைகொடுக்காமல் என்ன வேலையை செய்ததோ, அதே வேலையை இந்த படத்திலும் கச்சிதமாக செய்துள்ளார்.
சீறும் பாபி சிம்ஹா:
மூன்று பிள்ளைகள் இருந்தாலும், மெயின் வில்லன் நம்ம பாபி சிம்ஹா தான். ஜிகர்தண்டா படத்திற்கு பிறகு மீண்டும் மிரட்டியுள்ளார் என்றே, சொல்ல வேண்டும். அவரது கதாபாத்திரம் மிகவும் வலுவாக எழுதப்பட்டது தான் ரசிகர்களின் ஒரே ஆறுதல்.
சீயான் ஸ்கொயர்:
தந்தை மற்றும் மகன் என இரு வேடங்களிலும், உடல் மொழி என வித்தியாசத்தை தனக்கே உரிய பாணியில், சீயான் விக்ரம் பொளந்து கட்டுகிறார். பல இடங்களில் அவரது கடின உழைப்பும், மெனக்கெடலும் நம்மை மெர்சலாக்குகிறது. ஆனால், அவரது பலத்தை பாதியாக குறைப்பது போல் வரும் பன்ச் டயலாக்குகள் தான் தியேட்டரில் மக்களை சிரிக்க வைக்கிறது. படம் முழுவதும் வேகம் மட்டுமே இருக்கின்றது விவேகமும் கூடுதலாக இருந்திருந்தால், படம் பக்கா மாஸாக இருந்திருக்கும்.
மொத்தத்தில் சாமி ஸ்கொயர் படம், முந்தைய படத்தை மறந்து விட்டு பார்த்தால், ஒரு மாஸ் எண்டெர்டெயினர் படமாக இருக்கும். முந்தைய படத்தை நினைவு படுத்திக் கொண்டே ஆராய்ந்தால், சுமார் ரகம் என்றே தோன்றும்!
சாமி ஸ்கொயர் ரேட்டிங்: 2.75/5.