உலக கோப்பை ஆண்கள் ஹாக்கி போட்டி, ஒடிசா மாநிலத்தின் புவனேஸ்வரம் நகரில் நடைபெற உள்ளது. இதற்கான பாடலுக்கு இசையமைக்கும் பொறுப்பை ஒடிசா அரசு, ஏ.ஆர்.ரஹ்மானிடம் வழங்கியுள்ளது. புகழ்பெற்ற பாடலாசிரியர் குல்ஸார் இப்பாடலை எழுத இருக்கிறார்.
பதினான்காவது உலக கோப்பை ஹாக்கி போட்டி 2018 நவம்பர் 28ம் தேதி முதல் டிசம்பர் 15ம் தேதி வரை ஒடிசாவில் நடைபெற உள்ளது. 16 நாடுகளின் அணிகள் இதில் விளையாட உள்ளன. இந்தப் போட்டிக்கான பாடல், 'ஜெய் ஹிந்த், ஜெய் இந்தியா' என்ற தலைப்பில் எழுதப்பட உள்ளது. புகழ்பெற்ற பாடலாசிரியர் குல்ஸார் எழுத இருக்கும் இந்தப் பாடலுக்கு இசையமைக்க பிரபல இசையமைப்பாளரும் கிராமி மற்றும் ஆஸ்கார் விருதுகளை வென்றவருமான ஏ.ஆர்.ரஹ்மானை ஒடிசா அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
"நமக்கு மிகவும் பிரியமான விளையாட்டான ஹாக்கி, இந்தியாவை பிரதிபலிப்பதை விட வேறு எதுவும் இந்தியாவை சிறப்பாக காட்டிவிட இயலாது. உலகின் மிகப்பெரிய ஹாக்கி போட்டி நம் மைதானத்தில் நடப்பதை காட்டிலும் வேறு எதுவும் நம்மை பரவசப்படுத்திட இயலாது," என்று ஏ.ஆர்.ரஹ்மான் கூறியுள்ளார்.
"ஒடிசாவில் நடைபெறும் ஹாக்கி போட்டிக்கான பாடலுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பதில் அதிக மகிழ்ச்சி. அவர் புவனேஸ்வரத்தில் நடைபெறுவது பெருமைக்குரிய ஒன்று. இந்தியாவின் குரலான அவர், இந்தப் பாடலின் மூலம் உலக கோப்பைக்கான குரலாக ஒலிக்க இருக்கிறார். குல்ஸார் சாஹேப் பாடலை எழுதுவது எங்களுக்கு வாய்த்த அதிர்ஷ்டம்," என்று ஒடிசா முதல் அமைச்சர் நவீன் பட்நாயக் கூறியுள்ளார்.
அக்டோபர் மாத தொடக்கத்தில் கலிங்கா விளையாட்டரங்கில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள விழாவில் இப்பாடல் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நவம்பர் 27ம் நடைபெறும் தொடக்க விழாவில் ரஹ்மான் இப்பாடலை இசைப்பார் என்று தெரிகிறது.