விமர்சனம்: ராட்சசன் விஷ்ணு விஷால் அடிச்ச சிக்ஸர்!

விமர்சனம்: ராட்சசன் விஷ்ணு விஷால் அடிச்ச சிக்ஸர்!

by Mari S, Oct 5, 2018, 10:06 AM IST

கலகலப்பான முண்டாசுப்பட்டி படத்தை இயக்கிய ராம்குமார் உலக தரத்தில் ஒரு சைக்கோ த்ரில்லர் படத்தை உருவாக்கி, கோலிவுட்டையே மிரள வைத்துள்ளார். விஷ்ணு விஷால், இந்த கதையை தேர்வு செய்த இடத்திலேயே சிக்ஸர் அடித்து விட்டார்.

முண்டாசுப்பட்டி படத்திற்கு பிறகு, இயக்குநர் ராம்குமார் – விஷ்ணு விஷால் கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்துள்ள படம் ராட்சசன். இப்படத்தில், நாயகியாக அமலாபால் நடித்துள்ளார். முண்டாசுப்பட்டியில், காமெடியில் கலக்கிய முனிஷ்காந்த், ராட்சசனில் வலுவான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், காளி வெங்கட்டின் நடிப்பு அற்புதம்.

ராட்சசன் யார்?

சினிமா இயக்குநராக வேண்டும் என்ற ஆசையில், உலகின் தலை சிறந்த சைக்கோ த்ரில்லர் வழக்குகளை ஆவணப்படுத்தி வரும் நாளைய இயக்குநராக விஷால் அறிமுகமாகிறார். என்னடா டிரெய்லரில் போலீஸாக வருகிறாரே? என்று கேள்வி எழுப்புபவர்கள் கொஞ்சம் வெயிட் பண்ணுங்கோ!

இயக்குநராக ஆகவேண்டும் என்ற ஆசையில், வலம் வரும் விஷ்ணு விஷாலின், போலீஸ் தந்தை இறந்து விட, குடும்ப சூழல் காரணமாக போலீஸாக மாறுகிறார் விஷ்ணு. அட இது நல்லா இருக்கே!

சென்னையில், தொடர்ந்து பள்ளி மாணவிகள் கடத்தப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்படுகின்றனர். இந்த கேஸ் தமிழக காவல் துறைக்கு பெரிய சவாலாக அமைகிறது. இந்த வழக்கை விசாரிக்க, சினிமா இயக்குநராக ஆவதற்கு, விஷ்ணு ஆவணப்படுத்திய கேஸ்கள் பயன்படுகின்றது. அதனை கொண்டு, பள்ளி மாணவிகளை கடத்தி கொல்லும், ராட்சசனை விஷ்ணு கண்டுபிடிக்கிறாரா? கண்டு பிடித்து வதம் செய்கிறாரா? இல்லை ராட்சசன் தப்பிக்கிறானா? என்ற கிளைமேக்சுடன் மூன்று மணி நேர சினிமா, சிறிதும் போர் அடிக்காமல், நம்மை சீட்டின் நுனிக்கு கொண்டு செல்கிறது.

ராட்சசன் படம் சில இடங்களில் கொரியன் படமான மெமரிஸ் ஆஃப் மர்டரை நினைவுப் படுத்துகிறது. இந்த படத்தை வைத்துத் தான் மிஷ்கின் யுத்தம் செய் படத்தை இயக்கியது வேறு கதை. சைக்கோ படங்கள் என்றாலே உலக அளவில் கொரியன் படங்களுக்குத்தான் மவுசு. கேங்க்ஸ்டர் படங்களும் அது போன்று தான். நான் செக்கச் சிவந்த வானத்தை குறிப்பிடவில்லை. வெளி நாட்டு சினிமாவை பார்த்து வளரும் இளம் இயக்குநர்கள் தமிழில் அதை செய்ய வேண்டும் என முயற்சி செய்வதை இன்ஸ்பிரேஷன் என்றே எடுத்துக் கொள்ளலாம். ஜாம்பவான்களே காப்பி அடிக்கும் போது, ஒரு சில காட்சிகளை எடுப்பது பெரிய குற்றமல்ல என்றே தோன்றுகிறது.

படத்தில் தலைமை ஆசிரியராக வரும் ஒரு ராட்சசன், மாணவிகளை எப்படி பாலியல் தொல்லைக்கு அழைக்கிறான் என்ற காட்சி, பெற்றோர்களை பதபதைக்க வைக்கிறது.

ராட்சசன் ரேட்டிங்: 4/5.

You'r reading விமர்சனம்: ராட்சசன் விஷ்ணு விஷால் அடிச்ச சிக்ஸர்! Originally posted on The Subeditor Tamil

More Cinema News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை