ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள சர்வம் தாள மயம் படம் டோக்கியோ ஃபிலிம் ஃபெஸ்டிவலில் திரையிடப்படுகிறது.
மின்சாரகனவு, கண்டுக்கொண்டேன் கண்டுக்கொண்டேன் போன்ற சூப்பர்ஹிட் படங்களை கொடுத்த ராஜீவ் மேனன், நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில், ஜி.வி. பிரகாஷை நாயகனாக வைத்து ஏ.ஆர். ரஹ்மான் இசையில், சர்வம் தாள மயம் படத்தை இயக்கியுள்ளார்.
இந்தியாவில் படத்தை ரிலீஸ் செய்வதற்கு முன்னர், ஜப்பான் தலைநகரம் டோக்கியோவில், நடைபெறும் 31வது டோக்கியோ ஃபிலிம் ஃபெஸ்டிவலில் இத்திரைப்படத்தை திரையிடும் வாய்ப்பை பெற்றுள்ளனர்.
பிற்படுத்தப்பட்ட குடும்பத்தை சார்ந்த ஹீரோ, மிருதங்க வித்வானிடம் மிருதங்க கலையை கற்றுக் கொள்ள ஆசைப்படுகிறான். ஆனால், சாதி மத பிரச்னையால் கர்நாடக இசை சமூகத்தினரால் நிராகரிக்கப்படுகிறான். இந்த வலிகளை தாண்டி தனது ஆசையை வென்றானா? என்பதே கதையின் கருவாம்.
இப்படத்தில், ஏ.ஆர். ரஹ்மான் பிரத்யேக இசை சோதனைகளை செய்துள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது. சாதரண படங்களுக்கே செம ட்யூன் போடும், ரஹ்மானுக்கு இசை பற்றிய கதை கிடைத்தால் சிக்ஸர் அடிக்காமல் விடுவாரா? ஜி.வி. பிரகாஷிற்கு கிடைத்த பெரிய வாய்ப்பாக இப்படம் அமைந்துள்ளது.
இப்படத்தில் நெடுமுடி வேணு, அபர்ணா பாலமுரளி, வினித், திவ்யதர்ஷினி உள்ளிட்ட பிரபலங்கள் நடித்துள்ளனர். காஷ்மீர், ஷில்லாங், ஜெய்ப்பூர், கேரளா உள்ளிட்ட பல இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.