இந்தியாவின் பல்வேறு திரைத்துறையில் பாலியல் தொந்தரவுகள் குறித்த புகார்களை பிரபல நடிகைகள் எழுப்பி வரும் நிலையில் தமிழ் திரைப்பட பாடலாசிரியர் வைரமுத்து மீது பெண் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். வைரமுத்து மீது ஏற்கனவே ஒரு பெண் பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்த நிலையில் மீண்டும் ஒரு பெண் கூறிய புகார் திரைத்துறையில் பரபரப்பை ஏற்ப்படுத்தியது அது தொடர்பான ட்வீட்டை பத்திரிக்கையாளர் சந்தியா மேனன் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
ஹாலிவுட்டில் துவங்கிய #Metoo எழுச்சியை தொடர்ந்து உலகம் முழுவதும், பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தும் சக்திவாய்ந்த ஆண்கள் ஊடக வெளிச்சத்திற்கு வந்தனர். ஹாலிவுட் திரையுலகில் இந்த விவகாரம் இன்னும் முடிந்தபாடில்லை. இந்த விவகாரம் சூட்டை கிளப்பி வரும் நிலையில், தமிழ் திரையுலகில் நூற்றுக்கணக்கான படங்களுக்கு பாடல்கள் எழுதி, 7 முறை தேசிய விருது பெற்ற பிரபல பாடலாசிரியர் வைரமுத்து மீது பெண் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டை கூறியுள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண் தன்னிடம் தெரிவித்த தகவல்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பத்திரிகையாளர் சந்தியா மேனன் என்பவர் பதிவிட்டுள்ளார். இந்த விவகாரம் தமிழ் திரையுலகில் புயலை கிளப்பியுள்ளது.
பாதிக்கப்பட்ட பெண் கூறியதாக டிவிட்டரில் சந்தியா மேனன் பதிவிட்டுள்ளதாவது:
"எனக்கு 18 வயது இருக்கும்போது பாடலாசிரியர் வைரமுத்து தன்னிடம் தவறாக நடந்து கொண்டார். கோடம்பாக்கத்தில் உள்ள வைரமுத்துவின் வீடு மற்றும் அலுவலகத்தில் வைத்து, அவருடன் பணியாற்றிக் கொண்டிருந்த போது, திடீரென தன்னை வைரமுத்து கட்டிப்பிடித்து முத்தமிட்டார். அதைத்தொடர்ந்து நான் அங்கிருந்து தப்பி ஓடி விட்டேன். இந்த சம்பவத்திற்கு பிறகு அவர் இருக்கும் அறையில் தனியாக இருக்கவே எனக்கு நடுக்கமாக இருக்கும். பணியின் காரணமாக அப்படி ஒரே அறையில் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால், எப்போதுமே நிறைய பேர் இருக்கும்போது மட்டுமே செல்வேன்.
வைரமுத்து பாலியல் ரீதியாக பெண்களை சீண்டுபவர் என்பது சினிமா உலகில் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். ஆனால் அவருக்கு இருக்கும் அரசியல் தொடர்புகளை வைத்து பாதிக்கப்பட்ட பெண்களை அடக்கி விடுவதால், யாருமே அவரை எதிர்ப்பதில்லை. இது எனக்கு நடந்தது. அது தான் உண்மை. எனது பெயரை வெளியில் கூற நான் விரும்பவில்லை"
இவ்வாறு பாதிக்கப்பட்ட பெண் கூறியதாக பத்திரிக்கையாளர் சந்தியா மேனன் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இந்நிலையில் கல்லூரில் படிக்கும் மாணவி ஒருவர் வைரமுத்துவால் பாலியல் சீண்டலுக்கு உள்ளானதாக தெரிவித்துள்ளார். அது தொடர்பான ட்வீட்டை சந்தியா மேனன் தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
“வைரமுத்து இடமிருந்து ஒருநாள் எனக்கு அழைப்பு வந்தது. நானும் சென்றேன். என் தாத்தாவின் வயது இருக்கும் அவர், என்னை பாலியல் ரீதியாக அணுகினார். சுதாரித்துக்கொண்ட நான் உடனே அந்த அறையை விட்டு வெளியேறிவிட்டேன். சில நாட்கள் கழித்து என்னை மீண்டும் தொடர்பு கொண்ட வைரமுத்து, தன் மனைவியிடம் இந்த விவகாரம் பற்றி சொல்ல வேண்டாம் என்று வேண்டினார். நானும் சொல்லவில்லை. என் போன்ற பாதிக்கப்பட்ட பெண்கள் முன்வந்து புகார் அளிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இதை கூறுகிறேன். என் பெயரை தவிர்த்து விட்டு செய்தியாக வெளியிடுங்கள்” என்று அந்த பதிவில் பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார்.
மேலும் மேலும் சந்தியா மேனனின் இந்த பதிவை பாடகி சின்மயி ஸ்ரீபிரதா உள்ளிட்ட பிரபலங்கள் ட்விட்டரில் ரீட்வீட் செய்து வருகின்றனர். இந்த தகவலை ஒருசிலர் நம்பவில்லை எனினும் இது நடந்தது உண்மை என சின்மயி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக வைரமுத்து தரப்பிலிருந்து விளக்கம் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.