சமுத்திரகனியின் நடிப்பில் வெளியாகியுள்ள ஆண் தேவதை படம் வில்ஸ்மித் நடிப்பில் வெளியான பர்சூட் ஆஃப் ஹேப்பினஸ் படத்தின் தழுவல் தான். படத்தின் தொடக்கத்திலேயே பர்சூட் ஆஃப் ஹேப்பினஸ் படத்திற்கு நன்றி கார்டும் போட்டு துவங்கியுள்ளா இயக்குநர் தாமிரா.
ஆண் தேவதை கதையை பற்றி பார்ப்பதற்கு முன் பர்சூட் ஆஃப் ஹேப்பினஸ் படத்தின் கதையை சற்று பார்ப்போம்.
சாதாரண எக்ஸ்ரே மெஷினை விற்பனை செய்யும் ஏஜெண்டாக படத்தில் அசத்தியிருப்பார் வில்ஸ்மித். தனது மகனை மகிழ்ச்சியாக வைக்க ஒவ்வொரு தந்தையும் கஷ்டப்பட்டு உழைக்கும் வாழ்வியலை படம் அழகாக வெளிப்படுத்தியிருக்கும்.
பின்னர் ஒரு பங்குச்சந்தையில் புரோக்கராக தனது நிலையை வில்ஸ்மித் உயர்த்துவார். படத்தின் ஒவ்வொரு நொடியும், மனித வாழ்வுக்கு தேவையான மன நிறைவுடனும், மகிழ்ச்சியுடனும் கடக்க முடியாமல் படித்த படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காமல், குடும்ப பாரத்தை தாங்கி சுமக்கும் கதையை அழகாக காட்சிப்படுத்தியிருப்பார்கள்.
இந்த படத்திற்காக, ஆஸ்கர் கிடைக்கும் என காத்திருந்த வில்ஸ்மித்துக்கு, ஏமாற்றம் தான் கிடைத்தது என்பது வேறு கதை. ஆனால், உலக அளவில் வில்ஸ்மித்தை ஒரு சிறந்த நடிகராக மக்கள் ஏற்றது இந்த படத்தின் மூலம் தான்.
இந்த கதையை தழுவி, இயக்குநர் தாமிரா ஆண் தேவதை படத்தை எடுத்துள்ளார். அந்த படத்தில் வில்ஸ்மித்தின் மகன் ஜேடன் ஸ்மித் மட்டுமே நடித்திருப்பார். இந்த படத்தில், மனைவி, மகன் மற்றும் மகள் என தமிழ் சினிமாவிற்கே ஏற்ற வகையில் கதையை கையாண்டுள்ளார் இயக்குநர் தாமிரா.
எக்ஸ்ரே மெஷின் சேல்ஸ் ரெப்புக்கு பதிலாக மெடிக்கல் ரெப்பாக வரும் சமுத்திரகனி, பின்னர் ஹோட்டல் சமையல்காரராக மாறுகிறார்.
அதிகம் சம்பாதிக்க வேண்டும் என துடிக்கும் நடுத்தரவர்க்க குடும்ப பெண்ணாக நாயகி ரம்யா பாண்டியன் ஸ்கோர் செய்கிறார். இதனால், வேலையை விட்டு விட்டு வீட்டில் சிறிது காலம் ஹவுஸ் ஹஸ்பண்டாக சமுத்திரகனி குழந்தைகளை பராமரித்து வீட்டு வேலைகளை செய்து வருகிறார்.
ஒரு நாள் ஏற்படும் பிரச்னையில், மகளை அழைத்துக் கொண்டு வீட்டில் இருந்து வெளியேறுகிறார் சமுத்திரகனி. பின்னர், கணவன் மனைவி இணைந்தார்களா இல்லையா என்பதை நோக்கி ஆண் தேவதை படம் எடுக்கப்பட்டுள்ளது.
கடைக்குட்டி சிங்கம் படத்திற்கு குடும்பங்கள் கொண்டாடும் படமாக ஆண் தேவதை அமைந்துள்ளது. ஆனால், எதற்கெடுத்தாலும், அட்வைஸ் செய்யும் பழக்கத்தை சமுத்திரகனி சற்று கன்ட்ரோல் செய்வது நல்லது என்றே தோன்றுகிறது.
ஜிப்ரான் இசையில் ’நிகரா தன்னிகரா’ பாடல் ரசிக்க வைக்கிறது. அந்த குட் டச், பேட் டச் காட்சிக்கு தியேட்டரில் பாராட்டுக்கள் கிடைக்கிறது. விஜய் மில்டனின் அழகிய ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலம்.
பிக்பாஸ் முதல் சீசனில் வந்த சுஜா வருணி, ராதரவி என பலரும் இப்படத்தில் தங்களது பணியை சிறப்பாக செய்துள்ளனர்.
முன்னேற வேண்டும் நினைக்கும் சாமானியர்களின் கனவுகள் எப்படி பேராசைகளாக மாறி வாழ்க்கையின் சந்தோஷத்தை கெடுக்கிறது என்பதை ஆண் தேவதை பாடமாக நடத்துகிறது.
ஆண் தேவதை ரேட்டிங்: 45/100.