சபரிமலைக்கு வரும் பெண்களை இரண்டு துண்டாக வெட்டுவேன் என்று பிரபல மலையாள நடிகர் கொல்லம் துளசி கூறிய சர்ச்சை பேச்சுக்கு அவர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார்.
சபரிமலைக்கு பெண்களும் செல்லலாம் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பு ஒரு தரப்பினரிடம் ஆதரவு இருந்தாலும், நாடு முழுவதும் அதற்கு எதிர்ப்புகளும், போராட்டங்களும் வலுவடைந்து வருகிறது.
இந்நிலையில், பிரபல மலையாள நடிகர் கொல்லம் துளசி, உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளதால் சபரிமலை கோயிலுக்கு சென்றுவிடலாம் என்று சில இளம்பெண்கள் நினைக்கின்றனர். அப்படி வரும் இளம்பெண்களை இரண்டாக பிளந்து ஒரு பகுதியை டெல்லிக்கும், மற்றொரு பகுதியை முதல்வர் பினராய் விஜயன் அலுவலகத்திற்கும் அனுப்பி வைக்க வேண்டும் என்றார்.
இவரது பேச்சு பெண்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மேலும், கேரள மகளிர் ஆணையம் மற்றும் கொல்லம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், கொல்லம் துளசி தனது பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளார்.
இதுகுறித்து, கொல்லம் துளசி கூறுகையில், பக்தியால் உணர்ச்சிவசப்பட்டு அவ்வாறு பேசிவிட்டேன். நான் பேசிய கருத்துக்காக பகிரங்க மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் என்றார்.