சேவை வரி தொடர்பான வழக்கில் நேரில் ஆஜரான நடிகர் விஷாலிடம் எழும்பூர் நீதிமன்ற நடுவர் சரமாரி கேள்வி எழுப்பி திணறடித்துள்ளார்.
கடந்த 2016-ம் ஆண்டு சேவை வரித் துறையினர் நடிகர் விஷாலின் வீடு மற்றும் அலுவலகத்தில் திடீர் சோதனை மேற்கொண்டனர். இதைத்தொடர்ந்து அவர் ரூ.1 கோடிக்கு மேல் சேவை வரி செலுத்தவில்லை எனக்கூறி அவ ருக்கு சேவை வரித்துறை அதிகாரி கள் பலமுறை சம்மன் அனுப் பினர்.
ஆனால் அவர் தொடர்ந்து விசாரணைக்கு ஆஜராகாமல் இருந் தார். இதனால் விஷாலுக்கு எதிராக எழும்பூர் பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கு எழும்பூர் நீதிமன்ற மாஜிஸ்திரேட் மலர்மதி முன், இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகர் விஷால் இன்று நேரில் ஆஜரானார்.
அப்போது, 2016-ம் ஆண்டு 2 முறையும், 2017-ம் ஆண்டு 2 முறையும், 2018-ம் ஆண்டு ஒரு முறையும் சம்மன் அனுப்பியும் விஷால் ஆஜராகவில்லை என சேவை வரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நடுவர் மலர்மதி, சரமாரியாக கேள்வி எழுப்பினார். பதிலளிக்க முடியாமல் திணறிய நடிகர் விஷால், தன் மீது சேவை வரித்துறை பொய் வழக்கு போட்டுள்ளதாக விளக்கம் அளித்தார்.