திருச்சியில் குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தம்: 39 வயது மணமகன் தப்பி ஓட்டம்

by Isaivaani, Jan 22, 2018, 14:43 PM IST

திருச்சி: மின்னத்தாம்பட்டி கிராமத்தில் 9 வயது சிறுமிக்கு அவரது மாமாவான 39 வயது நபருடன் நடைபெற இருந்த திருமணத்தை போலீஸ் அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.

திருச்சி மாவட்டம், தொட்டியத்தை அடுத்துள்ள மின்னத்தாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பெண் கூலித் தொழிலாளியாக இருக்கிறார். இவரது கணவர் இறந்துவிட்டார். இவர்களுக்கு 9 வயதில் பெண் குழந்தை உள்ளது. சிறுமி அங்குள்ள அரசுப் பள்ளி ஒன்றில் 4ம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில், சிறுமிக்கு அதே கிராமத்தை சேர்ந்த 39 வயதான அவரது மாமா மணியுடன் திருமணம் செய்து வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளையும் சிறுமி மற்றும் மணியின் குடும்பத்தினர் நடத்தி வந்தனர். குழந்தைக்கு திருமணம் நடத்த இருப்பது குறித்து, அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, போலீஸ் இன்ஸ்பெக்டர் லதா மற்றும் மாவட்ட குழந்தைகள் நலக்குழுவைச் சேர்ந்த நிர்வாகிகள் சம்பந்தப்பட்ட கிராமத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். முன்னதாக, போலீஸ் அதிகாரிகள் வரும் தகவலை அறிந்த மணமகனும், உறவினர்களும் கிராமத்தை விட்டு தலைமறைவானார்கள்.

பின்னர், சிறுமியை மீட்ட போலீசார் மாவட்ட குழந்தைகள் நலக்குழுவினரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து, இக்குழு தலைவர் இந்திரா காந்தி மற்றும் குழுவினர் கிராமத்து மக்களிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது, “ சிறுமியின் உறவுகள், சொந்தம் விட்டுவிடக்கூடாது என்றும், பெண் குழந்தைகள் வளர்ந்துவிட்டால் தங்கள் பேச்சை கேட்காமல் காதல் போன்றவற்றில் விழுந்து விடுவார்கள் என்பதற்காகவும் சிறுவயது பெண்ணை எந்த வயது மாப்பிள்ளை என்றாலும் திருமணம் முடித்து விடுவோம். இது இந்த கிராமத்தில் வசிக்கும் குறிப்பிட்ட சமூக மக்களிடம் நடைமுறையாக தொடர்கிறது” என்பது தெரியவந்தது.

இதையடுத்து, அதிகாரிகள் சிறுமியின் நலனை எண்ணி தங்கள் பாதுகாப்பில் வளர்க்கவும், படிக்க வைக்கவும் முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

You'r reading திருச்சியில் குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தம்: 39 வயது மணமகன் தப்பி ஓட்டம் Originally posted on The Subeditor Tamil

More Crime News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை