சென்னையில் ஜவுளி கடையில் கொள்ளையடித்து சென்ற சிறுவன் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
தண்டையார்பேட்டை, வினோபா நகர், 7வது தெருவை சேர்ந்தவர் மோகன்குமார் (21). இவர் அதே பகுதியில் கும்மாளம்மன் கோயில் தெருவில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த வாரம் இவர் மதியம் வீட்டிற்கு சாப்பிட சென்றார். அந்த நேரத்தில், இவரது தம்பி விக்னேஷ் (18), என்பவர் வியாபாரத்தை கவனித்துக்கொண்டார். அப்போது பைக்கில் வந்த 5 பேர், ஆடை வாங்குவது போல் நடித்து, கடையில் யாரும் இல்லாத நேரத்தில், விக்னேஷை கத்தி முனையில் மிரட்டி சுமார் 20 பேன்ட், 25 சட்டை என 30 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஆடைகள் மற்றும் 10 ஆயிரம், 15 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள செல்போன் ஆகியவற்றை கொள்ளையடித்துக் கொண்டு, அங்கிருந்து தப்பிச்சென்றனர்.
இதுகுறித்து மோகன்குமார் தண்டையார்பேட்டை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தேடிவந்தனர். மேலும் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து ஆய்வு செய்தனர். அதில், கொள்ளையர்கள் பயன்படுத்திய இருசக்கர வாகனத்தின் எண் பதிவாகி இருந்தது. அதை வைத்து விசாரணை நடத்தியதில், காசிமேடு பல்லவன் நகர் பகுதியை சேர்ந்த சூர்யா (27), புதுவண்ணாரப்பேட்டை வெங்கடேஸ்வரன் நகரை சேர்ந்த பிரகாஷ் (எ) தேசப்பன் (26), விமல் (23), சரண் (30) மற்றும் பல்லவன் நகர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் ஆகிய 5 பேர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரிந்தது. அவர்களை் நேற்று கைது செய்தனர். அவர்களிடமிருந்து ஒரு கத்தி, பைக், பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
பின்னர், 5 பேரையும் ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 4 பேரை புழல் சிறையில் அடைத்தனர். 17 வயது சிறுவனை கெல்லீஸ் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர்.