பெண்களுக்கு எந்த இடத்திலும் பாதுகாப்பு இல்லை என்பதற்கு ஒரு உதாரணம் தான் கேரளாவில் நடந்த ஒரு கொடூர சம்பவம்...பத்தனம்திட்டா மாவட்டம் அடூர் என்ற இடத்தை சேர்ந்த 22 வயதான இளம்பெண் கொரோனா அறிகுறி களுடன் அங்குள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு பரிசோதித்த போது அவருக்கு கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து மேல் சிகிச்சைக்காக ஆரன்முளா என்ற இடத்திலுள சிகிச்சை மையத்திற்கு அவர் நள்ளிரவு 108 ஆம்புலன்சில் அனுப்பி வைக்கப்பட்டார். ஆம்புலன்சை காயங்குளம் பகுதியை சேர்ந்த நவ்ஃபல் (29) என்பவர் ஓட்டினார். இன்று அதிகாலை 1.30 மணியளவில் அந்த இளம்பெண்ணுடன் ஆம்புலன்ஸ் ஆரன்முளாவுக்கு புறப்பட்டது. வழியில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் ஆம்புலன்சை நிறுத்திய டிரைவர் நவ்ஃபல், அந்த இளம்பெண்ணை மிரட்டி பலாத்காரம் செய்துள்ளார். இதன்பின்னர் ஒன்றுமே தெரியாதது போல அந்த இளம்பெண்ணை மருத்துவமனையில் விட்டுவிட்டு சென்றுவிட்டார். தன்னை ஆம்புலன்சில் வைத்து வரும் வழியில் டிரைவர் பலாத்காரம் செய்தது குறித்து அவர் டாக்டர்களிடம் கூறினார். இதில் அதிர்ச்சி அடைந்த டாக்டர்கள் உடனடியாக ஆரன்முளா போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் மருத்துவமனைக்கு சென்று அந்த இளம்பெண்ணிடம் விசாரணை நடத்தினர். பின்னர் போலீசார் விரைந்து செயல்பட்டு ஆம்புலன்ஸ் டிரைவர் நவ்ஃபலை கைது செய்தனர்.
விசாரணையில் இவர் மீது ஒரு கொலை வழக்கு உள்பட பல கிரிமினல் வழக்குகள் இருப்பது தெரியவந்தது. கொரோனா பாதித்த இளம்பெண்ணை ஆம்புலன்சில் வைத்து டிரைவரே பலாத்காரம் செய்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து உடனடியாக விசாரணை நடத்த கேரள சுகாதாரத் துறை அமைச்சர் சைலஜா உத்தரவிட்டுள்ளார். மேலும் அந்த டிரைவரை உடனடியாக டிஸ்மிஸ் செய்யுமாறும் சம்பந்தப்பட்ட ஆம்புலன்ஸ் நிறுவனத்திற்கு அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.