கொரோனா காலத்தில் சர்வதேச அளவில் பெண் குழந்தைகளுக்கு எதிரான பலாத்கார சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக இண்டர்போல் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.
கொரோனாவால் அமலுக்கு வந்த ஊரடங்கு சட்டத்தால் உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் பல மாதங்களாக தங்களது வீடுகளிலேயே முடங்கிக் கிடந்தனர். பள்ளி, கல்லூரிகள் உள்பட கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டதால் மாணவர்களால் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
இந்த கொரோனாவால் ஒவ்வொருவரும் அனுபவித்து வரும் துன்பங்கள் கொஞ்ச நஞ்சமல்ல....உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் தங்களது வேலையை இழந்துள்ளனர். மேலும் வீடுகளிலேயே அனைவரும் முடங்கிக் கிடப்பதால் கணவன்-மனைவிக்கிடையே பிரச்சனைகள், பெற்றோர், குழந்தைகளுக்கு இடையே பிரச்சனைகள் என குடும்ப பிரச்சினைகளும் அதிகரித்தன. இதனால் கடந்த சில மாதங்களில் நீதிமன்றத்திற்கு செல்லும் குடும்ப வழக்குகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்தன.
இந்நிலையில் இந்த கொரோனா காலத்தில் சர்வதேச அளவில் குழந்தைகளுக்கு எதிரான பலாத்கார குற்றங்களும் அதிகரித்து இருப்பதாக இன்டர்போல் அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து இன்டர்போலின் செயலாளர் ஜெனரல் ஜர்ஜன் ஸ்டாக் கூறியது: கொரோனா காரணமாக ஏராளமானோர் பல துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு எதிரான பலாத்கார குற்றங்கள் அதிகரித்து வருவது கவலை ஏற்படுத்தியுள்ளது. பல சமூக இணையதளங்களில் பெண் குழந்தைகள் பலாத்காரம் செய்யப்படும் காட்சிகள் அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றன. சில இணையதளங்களில் குழந்தைகளின் பலாத்கார காட்சிகளை நேரடியாக காண்பிக்கும் சம்பவங்களும் நடந்துள்ளன.
இந்த காட்சிகளை நேரலையாக காண்பிக்கும்படி கேட்போரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இதற்கு ஏராளமான காரணங்கள் உள்ளன. தற்போது கல்வி நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதனால் பெரும்பாலான குழந்தைகள் ஆன்லைனில் தான் அதிக நேரத்தை செலவிடுகின்றனர். யாராலும் வெளியே எங்கும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளை தடுக்கும் அமைப்புகளால் முன்பு போல் தற்போது சுதந்திரமாக செயல்பட முடியாத நிலை உள்ளது. போலீசாரும் கொரோனா பணியில் தான் பெரும்பாலும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்
இதனால் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன.
பல வீடுகளில் பெற்றோர் கொரோனா பாதித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அந்த சமயத்தில் தங்களது குழந்தைகளை தெரிந்தவர்கள் அல்லது உறவினர் வீடுகளில் தான் ஒப்படைத்து விட்டு செல்ல வேண்டிய நிலை உள்ளது. அந்த வீடுகளில் வைத்தும் குழந்தைகள் துன்புறுத்தலுக்கு ஆளாகி வருகின்றனர். இந்த கொடுமைகளை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுத்தே ஆக வேண்டும். இல்லாவிட்டால் நிலைமை மோசமாகிவிடும். இவ்வாறு அவர் கூறினார்.