திமுக பொதுச் செயலாளர்.. பொருளாளர் போட்டியின்றி தேர்வு.. காணொலியில் பொதுக்குழு கூடியது.

by எஸ். எம். கணபதி, Sep 9, 2020, 13:33 PM IST

திமுக பொதுச் செயலாளராக துரைமுருகனும், பொருளாளராக டி.ஆர்.பாலுவும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.


திமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன், கடந்த சில மாதங்களுக்கு முன்பு மரணமடைந்தார். இதையடுத்து, அந்த பதவிக்கு புதியவரை தேர்வு செய்வதற்காக கடந்த மார்ச் 29ம் தேதி காலை 10 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் கட்சியின் பொதுக்குழு கூடும் என்று கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். ஆனால், கொரோனா வைரஸ் காரணமாக திமுக பொதுக்குழு கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.இதன்பின்னர், பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிடுவதற்காக பொருளாளர் பதவியை துரைமுருகன் ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து, பொதுச் செயலாளர், பொருளாளர் பதவிக்கு வேட்புமனு பெறப்பட்டது. பொதுச் செயலாளர் பதவிக்கு துரைமுருகனும், பொருளாளர் பதவிக்கு டி.ஆர்.பாலுவும் மனு தாக்கல் செய்தனர்.


இந்நிலையில், திமுகவின் பொதுக்குழு கூட்டம் இன்று காலை 10 மணிக்கு காணொலி வாயிலாக நடைபெற்றது. கூட்டத்தில் தமிழகம் முழுவதும் 67 இடங்களில் இருந்து சுமார் 3,500 பொதுக் குழு உறுப்பினர்கள் பங்கேற்கின்றனர். பொதுக்குழுவில் மாவட்டச் செயலாளா் தலைமையில் அந்தந்த மாவட்டத்தின் ஒன்றிய, நகர, பொதுக்குழு உறுப்பினா்கள் பங்கேற்றனர்.


கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் பதவிக்கு துரைமுருகனும், பொருளாளர் பதவிக்கு டி.ஆர்.பாலுவும் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். வேறு யாரும் மனு தாக்கல் செய்யாததால், இருவரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டாக ஸ்டாலின் அறிவித்தார்.


திமுகவில் பல ஆண்டு காலமாக தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் பதவிக்கு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டு வருகிறது. அந்த அடிப்படையில் இம்முறையும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இருவருக்கும் ஸ்டாலின் உள்பட கட்சியின் மூத்த நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

READ MORE ABOUT :

More Tamilnadu News

அதிகம் படித்தவை