கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய தங்க கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஸ்வப்னா சுரேஷுக்கு மீண்டும் நெஞ்சு வலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்திற்கு வந்த பார்சலில் துபாயில் இருந்து 30 கிலோ தங்கம் கடத்திய வழக்கில் தூதரக முன்னாள் அதிகாரி ஸ்வப்னா சுரேஷ் உள்பட 20க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏ, சுங்க இலாகா மற்றும் மத்திய அமலாக்கத் துறை ஆகிய மூன்று மத்திய குழுக்கள் விசாரணை நடத்தி வருகின்றன.
கைது செய்யப்பட்ட ஸ்வப்னா சுரேஷ் உள்பட இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகள் அனைவரும் திருச்சூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன் சிறையில் வைத்து ஸ்வப்னா சுரேஷுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் திருச்சூரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சிகிச்சைக்குப் பின்னர் நேற்று முன்தினம் இவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் நேற்று இரவு ஸ்வப்னா சுரேஷுக்கு மீண்டும் நெஞ்சு வலியும், வாந்தியும் ஏற்பட்டது. இதையடுத்து இரவோடு இரவாக அவர் திருச்சூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே கடந்த முறை அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது நர்ஸ் ஒருவரிடமிருந்து செல்போனை வாங்கி முக்கிய நபர் ஒருவரிடம் பேசியதாக கூறப்படுகிறது. இந்த தகவல் விசாரணை அதிகாரிகளுக்கு தெரிய வந்துள்ளது. இதையடுத்து அவர் யாரிடம் பேசினார் என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.