பெங்களூரு அருகே தன்னுடைய மகளுடன் ஓட்டம் பிடித்த வாலிபரைத் திருமணம் செய்து வைப்பதாகக் கூறி வரவழைத்து பெண்ணின் தந்தை உள்பட உறவினர்கள் கழுத்தை நெறித்துக் கொன்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே உள்ள பசவனஹள்ளி பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமி பதி (24). இவர் அப்பகுதியைச் சேர்ந்த நிஜாமுதீன் என்பவரது மகளைக் காதலித்து வந்தார்.
இருவரும் வேறு வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால் இரு வீட்டினரும் இந்த திருமணத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் காதலர்கள் அதற்காக மனம் தளரவில்லை. யார் எதிர்த்தாலும் திருமணம் செய்துகொள்ள அவர்கள் தீர்மானித்தனர். இதன்படி கடந்த சில தினங்களுக்கு முன் இருவரும் ஓட்டம் பிடித்தனர்.இது மணமகளின் தந்தை நிஜாமுதீனுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையடுத்து லட்சுமி பதியைக் கொல்வதற்கு அவர் திட்டம் தீட்டினார். ஆனால் லட்சுமி பதி தனது மகளுடன் எங்கு உள்ளார் என்பது குறித்து அவருக்குத் தெரியவில்லை. இதையடுத்து லட்சுமி பதியின் நண்பர்கள் சிலரைத் தொடர்புகொண்ட நிஜாமுதீன், திருமணத்திற்கு தனக்கு எதிர்ப்பு இல்லை என்றும், லட்சுமி பதி நேரில் வந்து பேசினால் உடனடியாக திருமணத்தை நடத்தலாம் என்றும் கூறியுள்ளார். இதுகுறித்து லட்சுமி பதியிடம் அவரது நண்பர்கள் தகவல் தெரிவித்தனர். அவரும் அதை நம்பி விட்டார்.
இதையடுத்து லட்சுமி பதி தனது அண்ணன் நடராஜனையும் அழைத்துக் கொண்டு நிஜாமுதீனின் வீட்டுக்குச் சென்றார். அப்போது வீட்டில் வைத்துப் பேச வேண்டாம் என்றும், வெளியே எங்காவது சென்று பேசலாம் என்றும் நிஜாமுதீன் கூறியுள்ளார். சிறிது தொலைவில் உள்ள ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு இருவரையும் நிஜாமுதீன் அழைத்துச் சென்றார். பின்னர் இருவருக்கும் அவர் மது கொடுத்துள்ளார். இந்த சமயத்தில் நிஜாமுதீனின் மகன் சிக்கந்தர் உள்பட 3 பேர் அங்கு வந்தனர்.அவர்கள் 4 பேரும் சேர்ந்து லட்சுமி பதியைத் தாக்கி கழுத்தை நெறித்துக் கொன்றனர்.
இதைப் பார்த்துப் பார்த்து அதிர்ச்சியடைந்த நடராஜன் அங்கிருந்து தப்பி ஓடினார். இது குறித்து நடராஜன் போலீசில் புகார் செய்தார். போலீசார் உடனடியாக விரைந்து சென்று லட்சுமி பதியின் உடலை மீட்டனர். நிஜாமுதீன் மற்றும் அவரது மகன் சிக்கந்தரை போலீசார் கைது செய்தனர். மற்ற 2 பேரையும் தேடி வருகின்றனர். லட்சுமி பதியைக் கொலை செய்ததை இருவரும் ஒப்புக்கொண்டனர். இந்த சம்பவம் கர்நாடக மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.