ஹாங்காங்கில் கள்ளக் காதலுக்கு இடையூறாக இருந்த மனைவியை அறிவியல் பூர்வமாக திட்டமிட்டு கொலை செய்ததாக மருத்துவ பேராசியர் ஒருவர் மீது வழக்கு நடைபெற்று வருகிறது. தாயுடன் 16 வயது மகளும் சேர்ந்து இறந்துள்ளார்.
2015 மே மாதம் 22ம் தேதி. சாய் குங் என்ற இடத்தில் சாய் ஷா சாலை. பிற்பகல் 3:15 மணிக்கு உடற்பயிற்சிக்காக ஒரு பெண் ஓடி வருகிறார். முக்கால் மணி நேரத்திற்கு முன்பு அவர் பார்த்த மஞ்சள் நிற கார் அதே இடத்தில் நின்று கொண்டிருக்கிறது. மழையே இல்லாத நேரத்தில் காரின் துடைப்பான்கள் வேலை செய்து கொண்டிருக்கின்றன. உள்ளே இரு பெண்கள் படுத்திருக்கின்றனர். முதலில் பார்த்தபோது, காரின் உள்ளே அவர்கள் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கின்றனர் என்று தான் அந்தப் பெண் நினைத்தார். முக்கால் மணி நேரமாகவோ சாலையில் காரை நிறுத்தி படுத்திருப்பார்கள்... சந்தேகப்பட்ட அந்தப் பெண்ணின் தகவல்படி, காவல்துறையினர் வருகின்றனர்.
காரின் உள்ளே இருந்த பெண் வோங் சூ ஃபங் (வயது 47), இன்னொருவர் அவரது மகள் காவ் லி லிங் (வயது 16). இருவரையும் பிரின்ஸ் ஆஃப் வேல்ஸ் மருத்துவமனைக்கு தூக்கிச் செல்கின்றனர். அங்கு மருத்துவர்கள் இருவரும் ஏற்கனவே இறந்து விட்டதாக அறிவித்துள்ளனர்.இறந்த தாய் மற்றும் மகளின் உடற்கூறு பரிசோதனையில் கார்பன் மோனாக்ஸைடு என்ற வாயுவை சுவாசித்ததால் மரணம் சம்பவித்துள்ளது என்று கூறப்பட்டது. வோங் சூ ஃபங் ஓட்டிச் சென்ற காரில் எந்த பிரச்னையும் இல்லாத நிலையில், நச்சு வாயுவை சுவாசிக்க வேண்டிய கட்டாயம் எப்படி ஏற்பட்டது என்று காவல்துறையினர் விசாரித்து வந்தனர். இருவரது உடலும் கிடந்த காரின் பின்பக்கம், சுமைகள் வைக்கும் பகுதியில் காற்றிறங்கிய இரண்டு உடற்பயிற்சிக்கான யோகா பந்துகள் கிடந்துள்ளன.
காவல்துறையினரின் புலன் விசாரணையில் தெரிய வந்த தகவல்களை வழக்குரைஞர் நீதிமன்றத்தில் கூறியுள்ளார்.
வோங் சூ ஃபங்கின் கணவர் காவ் கிம் சன் (வயது 53), மருத்துவர். மலேசிய குடிமகன். மயக்கவியல் நிபுணரான இவர், பிரின்ஸ் ஆஃப் வேல்ஸ் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்துள்ளார். சீன பல்கலைக்கழகத்தில் மருத்துவ இணை பேராசிரியராகவும் வேலை பார்த்துள்ளார்.பல்கலைக்கழகத்தில் படித்த மாணவி ஒருவருக்கும் பேராசிரியர் காவ் கிம் சன்னுக்கும் காதல் மலர்ந்துள்ளது. நான்கு குழந்தைகள் உள்ள நிலையில் வோங் சூ ஃபங்குக்கு கணவரின் நடத்தை பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. காவ் கிம் சன், விவாகரத்து கேட்ட நிலையில் மனைவி அதற்கு சம்மதிக்கவில்லை. ஒரே வீட்டில் இருவரும் தனித்தனியே சமையல் செய்தனர் என்று வீட்டின் பணிப்பெண் கூறியுள்ளார். பிள்ளைகளுக்கும் தனக்கும் வோங் சூ ஃபங், சமையல் செய்து கொள்ள, காவ் கிம் சன் தனியாக சமையல் செய்துள்ளார். கணவரின் காதல் லீலை பற்றி தெரிந்தும், மனைவி விவாகரத்துக்கு சம்மதிக்கவில்லை.
மன்மத மனநிலையில் இருந்த டாக்டர் காவ் கிம் சன் தமது மருத்துவ அறிவை கொண்டு மனைவியை தீர்த்துக்கட்ட முடிவு செய்துள்ளார். அதன்படி, நச்சுவாயுவான கார்பன் மோனாக்ஸைடு என்ற வாயுவை ஆராய்ச்சிக்கு என்று கூறி வாங்கியுள்ளார். அந்த வாயுவை தனது காதலியான மாணவி உதவியுடன் யோகா பந்துகளில் அடைத்துள்ளார். நச்சுவாயு கசியும்படி, பந்துகளை மனைவியின் காரினுள் வைத்துள்ளார். அன்று தாயுடன் காரில் பயணித்த மகள் காவ் லி லிங்கும் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
மனைவியையும், சொந்த மகளையும் காவ் திட்டமிட்டு கொலை செய்துள்ளது குறித்து வழக்குரைஞர் ஆண்ட்ரூ புரூஸ் நீதிமன்றத்தில் விவரித்தார். இதைக் கேட்டபோது டாக்டர் காவ் கிம் சன், கதறி அழுதார்.
காதலுக்கு கண்ணில்லை; கள்ளக் காதலுக்கு...?