கோவையில் பாஜக உறுப்பினரை மதுபாட்டிலை உடைத்து குத்திக் கொலை செய்துவிட்டு தலைமறைவாகியுள்ள அக்கட்சியின் இளைஞரணி நிர்வாகி கைது.
விநாயகர் சதுர்த்திக்கு வசூல் செய்த பணத்தைக் கொண்டு நடத்தப்பட்ட மதுவிருந்தில் கணக்கு கேட்டதால் நடந்த விபரீதம் இது.
கோவை மாவட்டம் ஆலந்துறை பகுதியில் பொதுமக்களிடம் பணம் வசூலித்து பா.ஜ.கவினர் விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடத்தினர். சிலையை கரைத்தபின் கணக்குப் பார்த்ததில் ஒரு பெரும் தொகை மிச்சமிருக்க, அதனை என்ன செய்வதென்று யோசிக்கையில் கிடா வெட்டி மதுவிருந்து வைக்காலமென முடிவு செய்யப்பட்டது.
கடந்த 30ஆம் தேதி கோவை போளுவம்பட்டி கணபதி தோட்டத்தில் விருந்து நடத்தப்பட்டது. விநாயகரின் பெயரை சொல்லி வசூலிக்கப்பட்ட பணத்தில் ஆட்டுக்கிடாய்களும், நூற்றுக்கணக்கான மதுபாட்டில்களும் வாங்கப்பட்டு விருந்து நடைபெற்றதாக கூறப்படுகிறது.
விருந்து கொண்டாட்டம் உச்சத்தில் இருந்தபோது, பாஜக உறுப்பினரான நாகராஜ் என்பவர் வசூல் செய்த பணத்தில் பாதிக்கும் மேல் மாயமாகியுள்ளதாகவும், அதனை மாவட்ட பாஜக இளைஞரணி தலைவரான கந்தசாமி சுருட்டி விட்டதாகவும் அங்கிருந்தவர்களிடம் கூறியுள்ளார்.
இந்த தகவல் கந்தசாமிக்கு தெரியவர நாகராஜ் மதுகுடித்துக் கொண்டிருந்த இடத்திற்கு வந்து தன்னை பற்றி தரக்குறைவாகப் பேசியது ஏன்? என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பதிலுக்கு நாகராஜும் விநாயகர் சதுர்த்திக்கு வசூல் செய்த பணம் குறித்து கணக்கு காட்டுமாறு தகராறு செய்ய கைகலப்பில் முடிந்துள்ளது.
ஒரு கட்டத்தில் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற கந்தசாமி அங்கிருந்த மதுபாட்டில் ஒன்றை உடைத்து நாகராஜனை குத்தியுள்ளார். ரத்த வெள்ளத்தில் சரிந்த நாகராஜனை கண்ட அனைவரும் அங்கிருந்து ஓடிவிட்டனர் சிலர் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் செவ்வாய்கிழமை காலையில் நாகராஜன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து கொலை வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், தலைமறைவான கந்தசாமியை தேடி வருகின்றனர்.
கொலை செய்தது ஒருபுறம் இருக்க, விநாயகர் பெயர் சொல்லி வசூலித்த பணத்தில் மதுவுடன் கிடாவிருந்து நடைபெற்றதையறிந்த அப்பகுதி மக்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.
மது பாட்டிலால் குத்தப்பட்ட நாகராஜ் மருத்துவமனையில் உயிரிழந்ததால் கந்தசாமி மீதான வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது. இதையடுத்துக் கந்தசாமி தலைமறைவாகிவிட்டார். ஆலந்துறைக் காவல்துறையினர் அவரைத் தேடிவந்த நிலையில், மாலையில் கைதுசெய்தனர் இப்பொழுது அவரிடம் விசாரணை நடைபெற்றுவருகிறது.