ஏராளமான தனிநபர்களிடமிருந்து நிதி திரட்டும் கிரவுட் பண்டிங் வழி முறையில் வேட்பாளர்கள் தேர்தல் செலவுக்கு தேவையான பணத்தை திரட்டி வருகின்றனர்.
ஒருவர் தனது திட்டம் அல்லது தொழிலுக்கு தேவையான பணத்தை அதிக எண்ணிக்கையிலான தனிநபர்களிடமிருந்து ஆன்லைன் வாயிலாக நிதி திரட்டுவதுதான் கிரவுட் பண்டிங். அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் இது மிகவும் பிரபலம். இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாகதான் கிரவுட் பண்டிங் பிரபலமாகி வருகிறது. தற்போது பலர் சினிமா எடுப்பதற்கும் கிரவுட் பண்டிங் வழியை பின்பற்ற தொடங்கியுள்ளனர்.
2017ல் அரசியலில் கிரவுட் பண்டிங் வாயிலான நிதி திரட்டும் முறை அறிமுகமானது. அந்த ஆண்டு மணிப்பூர் சட்டப்பேரவை தேர்தலின் போது ஆயுதப்படைகள் சட்டத்தை எதிர்த்து போராடி வந்த இரோம் ஷா்மிளா அரசியல் கட்சி தொடங்கிய போது கிரவுட் பண்டிங் மூலம் ரூ.4.5 லட்சம் திரட்டினார். அதனை தற்போது மற்றவர்களும் பின்பற்றி வருகின்றனர்.
பீகாரில் பெகுசராய் தொகுதியில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் கன்னையா குமார் இதுவரை 5,500க்கும் மேற்பட்டவர்களிடம் ரூ.70 லட்சம் திரட்டி உள்ளார். மகாராஷ்டிராவில் நாக்பூர் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் நானாபாபு படோல், டெல்லி ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்கள் ராகவ் சட்டா, ஆதிஷி மார்லேனா உள்பட பலர் தங்கள் தேர்தல் செலவுக்காக கிரவுட் பண்டிங்கில் நிதி திரட்டி வருகின்றனர்.