ரபேல் வழக்கில், திருடப்பட்டதாக கூறப்பட்ட ஆவணங்களை விசாரிக்கக் கூடாது என்ற மத்திய அரசின் கோரிக்கையை நிராகரித்து உச்ச நீதிமன்றம் பரபரப்பான தீர்ப்பை அளித்துள்ளது. இது மோடி அரசுக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.
ரபேல் போர் விமானங்கள் வாங்கியதில் ஊழல் நடந்துள்ளதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியது. மேலும், டசால்ட் நிறுவனத்துடன் 36 ரபேல் விமானங்கள் வாங்குவதற்கு போடப்பட்ட ஒப்பந்தத்தில் ஏராளமான சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், இதனால் மத்திய அரசுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு என்றும் இந்து ஆங்கில நாளிதழில் என்.ராம் எழுதி வந்தார். ராணுவத்தின் கொள்முதல் கமிட்டிகளின் பேச்சுவார்த்தைகளை புறந்தள்ளி விட்டு, பிரதமர் மோடி அலுவலகமே நேரடியாக தனிப் பேச்சுவார்த்தை நடத்தியதால், பிரதமர் நரேந்திர மோடிக்கு இந்த ஊழலில் தொடர்பு என்றும் குற்றம்சாட்டப்பட்டது.
இது தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. அந்த வழக்கில் மத்திய அரசு தாக்கல் செய்த ரகசிய அறிக்கையில், ‘இந்த ஒப்பந்தத்தில் எந்த இழப்பும் ஏற்படவில்லை என்று சி.ஏ.ஜி. அறிக்கை கொடுத்துள்ளதாகவும், அது நாடாளுமன்றக் குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறியிருந்தது. இதை ஏற்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் அமர்வு, கடந்த டிசம்பர் 14ம் தேதி அளித்த தீர்ப்பில் ஒப்பந்தத்தில் முறைகேடு எதுவும் நடக்கவில்லை என்று கூறி ஊழல் குற்றம்சாடடிய மனுக்களை தள்ளுபடி செய்தது.
ஆனால், அது தவறான தகவல் என்று வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், யஸ்வந்த் சின்கா உள்ளிட்டோர் மறு ஆய்வு மனு தாக்கல் செய்தனர். அதில் இந்து நாளிதழில் வெளியான ஆவணங்களையும் தாக்கல் செய்தனர். இதையடுத்து, அந்த ஆவணங்கள் ராணுவ அமைச்சகத்தில் இருந்து திருடப்பட்ட ஆவணங்கள் என்பதால், அதை பரிசீலிக்கவே கூடாது என்று மத்திய அரசு வாதாடியது. ஆனால், திருடப்பட்ட ஆவணங்கள் என்றால் அதில் கூறப்பட்ட குற்றச்சாட்டுகளை மறுத்து விட முடியுமா? என்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இந்த சூழலில், இந்த மறு ஆய்வு மனுக்கள் மீதான தீர்ப்பை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய், நீதிபதிகள் எஸ்.கே.கவுல், கே.எம். ஜோசப் இன்று வழங்கினர். அதில் அவர்கள், ‘‘இந்து நாளிதழில் வெளியான ஆவணங்கள், திருடப்பட்ட ஆவணங்கள் என்பதால் அதை பரிசீலிக்கக் கூடாது என்று மத்திய அரசு வாதாடியது. ஆனால், அதை நாங்கள் நிராகரிக்கிறோம். அந்த ஆவணங்கள் அடிப்படையில் விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும்’’ என்று கூறியுள்ளனர்.
இதன் மூலம், ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இது பிரதமர் மோடி அரசுக்கு கடும் நெருக்கடி தரும் என்பது சந்தேகமல்ல. மேலும், தேர்தல் நேரத்தில் எதிர்க்கட்சிகளுக்கு மோடி அரசை எதிர்த்து கடுமையாக பிரச்சாரம் செய்ய வாய்ப்பு கொடுத்துள்ளது.