திருநெல்வேலியில், கோயில் உண்டியல் பணத்தை கையாடல் செய்ததாக இரண்டு அதிகாரிகள் உட்பட 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
திருநெல்வேலி மாவட்டம் சிவகிரியில் காளியம்மன் கோயில் உள்ளது. அந்த கோயில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. கோயில் கணக்காளராக அதே ஊரைச்சேர்ந்த முனுசாமி (வயது 40) பணியாற்றி வந்தார். இவர் உண்டியல் வசூல் பணத்தை வங்கியில் செலுத்தாமல் மோசடி செய்தார். அப்போது கோயில் நிர்வாக அதிகாரியாக இருந்த சத்தியசீலன் இதை கண்டுபடித்து முனுசாமியை கண்டித்துள்ளார். ஆனாலும் முனுசாமி பணத்தை வங்கியில் செலுத்தவில்லை.
இந்த நிலையில் சத்தியசீலன் வேறு கோயிலுக்கு இடமாற்றம் செய்யப்பட்டு, தங்கபாண்டியன் சிவகிரி காளியம்மன் கோயிலின் புது நிர்வாக அதிகாரியாக பொறுப்பேற்றார். அண்மையில் உண்டியலை திறந்து எண்ணியபோது சுமார் ஒன்றரை லட்சம் ரூபாய் இருந்தது. அந்த பணத்தையும் முனுசாமி வழக்கம் போல் ஆட்டையை போட்டு விட்டார். இதனையடுத்து தங்கபாண்டியன் முனுசாமியின் கையாடல் தொடர்பாக குற்றாலம் கோயில் உதவிஆணையரிடம் புகார் செய்தார்.
இது குறித்து விசாரணை நடத்திய அறநிலையத்துறை இணை இயக்குனர் பரஞ்ஜோதி, கையாடல் செய்த முனுசாமி, நிர்வாக அதிகாரிகள் தங்கபாண்டியன், சத்தியசீலன் ஆகிய மூவரையும் சஸ்பெண்ட் செய்தார். பாதிக்கப்பட்ட நிர்வாக அதிகாரிகள் கூறுகையில், முனுசாமி தான் கையாடல் செய்தார். அவர் மீது நாங்கள் புகார் அளித்தோம்.
ஆனால் எங்களையும் சேர்த்து சஸ்பெண்ட் செய்துள்ளனர். புகார் அளித்த எங்கள் மீது நடவடிக்கை பாய்ந்துள்ளது' என்றனர்.
பரஞ்ஜோதி கூறுகையில், 'இந்த அதிகாரிகளின் பணிக்காலத்தில் மோசடி நடந்துள்ளது. தெரிந்தே நடவடிக்கை எடுக்காததால் சஸ்பெண்ட் செய்துள்ளோம். கணக்காளர் முனுசாமி தலைமறைவாகிவிட்டார்', என்றார்.