திருப்பரங்குன்றம் அதிமுகவில் மல்லுக்கட்டு...! சர்ச்சை சினிமா கந்து வட்டி புள்ளி வேட்பாளரா..?

Tiruparankundram by election, heavy fight in admk to get seat

by Nagaraj, Apr 23, 2019, 10:08 AM IST

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் வேட்பாளரை இறுதி செய்வதில் இழுபறி நீடிக்கிறது. சீட்டு எனக்கு உனக்கு என பல கோஷ்டிகள் மோதுவதால் பெரும் மல்லுக்கட்டாக உள்ளது. அடிக்கடி சர்ச்சையில் சிக்கும் பிரபல சினிமா பைனான்சியருக்கே சீட் கொடுக்க வேண்டும் என்று மதுரை அமைச்சர் தரப்பு பிடிவாதமாக இருப்பதால் வேட்பாளரை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, சூலூர் ஆகிய 4 சட்டசபைத் தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 19-ந் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு வேட்பு மனுத்தாக்கலும் நேற்றே தொடங்கி விட்டது. இந்தத் தொகுதிகளில் திமுக, அதிமுக, அமமுக இடையே மும்முனைப் போட்டி உறுதியாகியுள்ளது. திமுகவும், அமமுகவும் வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பணிகளிலும் சுறுசுறுப்பாகி விட்டனர்.

அதிமுக தரப்பில் கடந்த ஞாயிறன்று விருப்ப மனு பெறப்பட்டு உடனே நேர்காணலும் நடைபெற்று முடிந்துள்ளது. 4 தொகுதிகளுக்கும் நூற்றுக்கும் மேற்பட்டோர் விருப்ப மனு செய்த நிலையில், நேற்று மாலையே வேட்பாளர்கள் பெயர் அறிவிக்கப்படும் என கூறப்பட்ட நிலையில் இழுபறி நீடிக்கிறது.

ஒவ்வொரு தொகுதியிலும் கோஷ்டித் தலைவர்கள் , தங்களின் ஆதரவாளர்களை வேட்பாளராக்கி விட வேண்டும் என நெருக்கடி கொடுப்பதால் முடிவெடுப்பதில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளதாம். அதிலும் திருப்பரங்குன்றம் தொகுதிக்குத் தான் ஏக மல்லுக்கட்டு என்று கூறப்படுகிறது.

இங்கு ஓபிஎஸ் தனது தீவிர விசுவாசியான முன்னாள் எம்எல்ஏ மீசை முத்துராமலிங்கத்துக்கு ஒதுக்க வேண்டும் என ஒற்றைக் காலில் நிற்கிறாராம்.அமைச்சர் உதயகுமாருக்கோ முத்துராமலிங்கத்தை சுத்தமாக பிடிக்காது என்பதால் மறைந்த முன்னாள் எம்எல்ஏ சீனி வேலுவின் மகன் செல்வக்குமாருக்கு சப்போர்ட் செய்கிறாராம் -

இதற்கிடையே சர்ச்சை புகழ் சினிமா கந்து வட்டி பைனான்சியர் அன்புச் செழியனை முன்னிறுத்தி அமைச்சர் செல்லூர் ராஜு மல்லுக்கட்டுகிறாராம். அன்புச் செழியனோ தனக்கு சீட் கொடுத்தால் திருப்பரங்குன்றம் மட்டுமின்றி ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி தொகுதிகளுக்கான முழு தேர்தல் செலவுகளையும் பார்க்கிறேன் என்று கெத்து காட்டுகிறாராம்.

இதனால் திருப்பரங்குன்றம் வேட்பாளர் தேர்வு பஞ்சாயத்து மட்டும் நேற்றிரவு நள்ளிரவு தாண்டியும் தலைமைக் கழகத்தில் பல மணி நேரம் நீடித்தும் முடிவுக்கு வரவில்லை எனத் தெரிகிறது. ஒரு கட்டத்தில் தனது ஆதரவாளர் மீசை முத்துராமலிங்கத்துக்கு எதிர்ப்பு கிளம்பியதால் விரக்தியடைந்த ஓபிஎஸ், திடீரென கூட்டத்திலிருந்தே வெளியேற பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

மதுரை பார்ட்டிகளின் இந்தக் கூத்தையெல்லாம் ரசிக்காத முதல்வர் எடப்பாடியோ, வேறு ஒரு கணக்குப் போட்டுள்ளாராம். கட்சிக்குள் எந்தக் கோஷ்டிக்கு சீட் கொடுத்தாலும் மற்ற அனைத்து கோஷ்டிகளும் குழி பறிப்பு வேலைகளில் இறங்கி தோல்வி என்பது நிச்சயமாகி விடும். அதனால் பொதுவான ஒரு வேட்பாளராக திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த பிரபல பத்திரிகையாளர் ஒருவரை நிறுத்தி அனைத்து கோஷ்டிகளின் வாயை அடைக்கலாம் என எடப்பாடி முடிவெடுத்துள்ளாராம்.

வாரப் பத்திரிகை ஒன்றின் செய்தியாளராகவும், எழுத்தாளர், கவிஞர், சமூக நல ஆர்வலர் என திருப்பரங்குன்றத்தில் பிரபலமான பாக்கியராஜுக்கு எடப்பாடியின் ஆதரவு இருப்பதால் கடைசி நேரத்தில் அவரையே வேட்பாளராக்கினாலும் ஆச்சர்யமில்லை என்று கூறப்படுகிறது. நேர்காணலிலும் பத்திரிகையாளர் பாக்கியராஜூக்கு எடப்பாடி தரப்பில் கொடுக்கப்பட்ட முக்கியத்துவத்தை மதுரை அதிமுக புள்ளிகள் அதிர்ச்சியுடனே கவனித்தனராம்.

சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல தயாராகிறார் விஜயகாந்த்!

You'r reading திருப்பரங்குன்றம் அதிமுகவில் மல்லுக்கட்டு...! சர்ச்சை சினிமா கந்து வட்டி புள்ளி வேட்பாளரா..? Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை